கோவில்பட்டியில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் கொள்ளை வழக்கி்ல் மேலும் 2 பேரையும் போலீசார் கைது நேற்று செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முகமது சாலியாபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் முகமது சையது சுலைமான் (50). இவர் ஆட்டு இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி இரவு மர்மநபர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இக்கொள்ளைவழக்கில் ஏற்கனவே, 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 43 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், கூட்டாளிகளான மதுரை மாவட்டம் நியூபங்கஜம் காலனி முதல் தெருவை சேர்ந்த வீரபத்திரன் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (26), சென்னை மணலி லால்பகதூர் சாஸ்திரி நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா என்ற மணலி சிவா (29) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


