சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளஞ்சிறார்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அமுதுண்ணான்குடி, அண்ணாநகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன் மகன் சந்துரு (20). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் சுபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பத் தகராறில் சுபா அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
பின்னர் அவர், மாணிக்கவாசகபுரத்தைச் சேர்ந்த மரிய ஜோசப் மகன் கிங்ஸ்டன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த விபரம் சந்துருக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிங்ஸ்டன் அவரது நண்பர்ளுடன் சேர்ந்து நேற்று இரவு சந்துரு வேலை முடிந்து வரும்போது அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் (பொ) நாககுமாரி வழக்குப் பதிந்து கிங்ஸ்டன் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மகராஜன் (20), கருப்பசாமி மகன் லங்கதுரை (18), மற்றும் 2 இளஞ்சிறார் என 5பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


