தூத்துக்குடியில் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர், அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : 1949 ஆம் ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு கற்றுத் தந்தவரும், இருவண்ணக் கொடியை நம் கட்சிக்கு தந்தவரும், தமிழ் இனம், தமிழ் மொழி என்ற உணர்வுமிக்க கருத்துக்களை மக்களிடம் பரப்பினவர்.
தமிழகத்தில் சாதி, மத வேறுபாடின்றி சமத்துவம், சமூகநீதி, சமதர்மம், சுயமரியாதை ஆகிய கொள்கைகளைக் காத்திட்டவர். மேலும் தமிழருக்கு பாதுகாப்பான இயக்கமாக தி.மு.கழகத்தை உருவாக்கி அதன்மூலம் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள். அவர் முதலமைச்சராக இருந்த இரண்டாண்டு காலத்தில் தமிழ்நாடு என பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார்.
அன்னாருடைய 56 வது நினைவு தினம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளராகிய என்னுடைய தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இந்த ஊர்வலமானது தூத்துக்குடி ராஜாஜி பூங்காமுன்பிருந்து தொடங்கி பாளை ரோடு வழியாக புதிய மாநகராட்சி சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலை அமைந்திருக்கும் இடத்தில் முடிவடைகிறது. அங்கிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், மாநகராட்சி, கவுன்சிலர்கள் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
மேலும் அன்றைய தினம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகங்களுக்கு உட்பட்ட கிளைக்கழக, வட்டக்கழக அளவில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்திடவும் கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


