தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் கல்லூரியின் கணித மன்றம் மற்றும் ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கணித வினாடிவினா போட்டி நடைபெற்றது.
வினாடிவினா நிகழ்ச்சியை கீழவல்லநாடு இன்பன்ட் ஜீஸஸ் பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் கணிதப் பேராசிரியருமான இரா.பாஸ்கரன் நடத்தினார். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள 18 பள்ளிகளைச் சார்ந்த ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தகுதிச்சுற்றில் பங்கேற்றனர். 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
ஆறு குழுக்களுக்கும் ஆறு சுற்றுகளாக வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் திருநெல்வேலி புஷ்பலதா வித்யாமந்திர் முதல் இடத்தையும், லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி குட்ஷெப்பர்டு மாடல் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. தகுதி சுற்றில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் ச.முரளிதரன், கல்லூரி முதல்வர் அ.ஜாய்சிலின் ஷர்மிளா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி உதவிப் பேராசிரியைகள் த. சண்முக செல்வ சிவ சங்கரி, எமிமா, இரா. தங்க செல்வம் மற்றும் நூலகர் இரா. பொன் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.


