தூத்துக்குடியில் பிஸ்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 3 இயந்திரங்களைத் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் கென்னடி(60). இவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள கோமஸ்புரத்தில் பிஸ்கெட் தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இவரது நிறுவனத்தின் கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான மோட்டார், உள்ளிட்ட 3 இயந்திரங்களை திருடிச் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து கென்னடி அளித்த புகாரின்பேரில், தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், திரேஸ்புரத்தைச் சேர்ந்த நந்தகுமார்(24), தாளமுத்துநகரைச் சேர்ந்த மகாராஜா (19) ஆகிய இருவரும் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


