விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேரை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்-மதுரை புறவழிச் சாலை மீனாட்சியம்மன் கோயில் சந்திப்பு பகுதியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அரிகண்ணன் தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அந்தக் காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் காரில் இருந்த, அய்யனாரூத்தை சேர்ந்த மணிகண்டன் (40), சிவஞானபுரத்தை சேர்ந்த கணேசன் (22) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், இவர்கள் வில்வமரத்துப்பட்டி, கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, எட்டயபுரம், மேலக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காற்றாலை தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அந்த காரில் இருந்த தலா 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளை பறிமுதல் செய்தனர் . மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


