தூத்துக்குடி பழைய துறைமுகம் கடற்கரை அருகே கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்த 3 அரியவகை கடல் ஆமைகளை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில், தடை செய்யப்பட்ட கடல் ஆமை உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வனஉயிரின சரக அலுவலருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் வனச்சரக அலுவலர் ஜினோ பிளஸ்ஸில் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகில் 3 கடல் ஆமைகள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக, கீழுர் அரசு உதவி கால்நடை மருத்துவர் வினோத் அங்கு சென்று ஆமைகளின் உடல்நிலையை பரிசோதித்தார். ஆமைகள் உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது. மேலும், இது பச்சை ஆமை வகையை சேர்ந்தது. இதில் 2 ஆமைகள் தலா 200 கிலோ, ஓர் ஆமை சுமார் 70 கிலோ எடை இருந்தது. இவை உயிருடன் இருந்ததால், உடனடியாக அவற்றை கடலில் விட முடிவு செய்யப்பட்டது.
இதைடுத்து, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையில், 3 ஆமைகளும் வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளையூரணி கால்நடை உதவி மருத்துவர் பிரவீணா, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனவர் பிரதீப், வனப்பாதுகாப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளர்கள் சுதாகர், மணிகண்டன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், மீனவர்கள் படகு மூலம் 3 ஆமைகளையும் கடலுக்குள் கொண்டு சென்றனர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு சென்று ஆழமான பகுதியில் கடலில் விடப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆமைகளை பிடித்தவர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


