தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்று தை மாதத்தின் முதல் முகூர்த்தத்தை முன்னிட்டு ஏராளமான திருமணங்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்தது. இதற்காக வருகை தந்த திருமணத் தம்பதிகள் மற்றும் அவரது உறவினர்கள் என ஏராளமானோர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
மேலும் பொங்கல் விடுமுறையின் கடைசி விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூருக்கு வருகை தந்த பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் நீராடி நீண்ட வரிசையில் குடும்பத்துடன் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் திருச்செந்தூருக்கு நடைபாதையாக வருகை தந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவில் வளாகத்தில் ஆட்டம் பாட்டத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் திருச்செந்தூர் கோவில் வளாகம், பேருந்து நிலையம், கடற்கரை பகுதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.


