திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 19ஆம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை தை உத்திர நட்சத்திர நாளில் நடைபெற்றது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இரவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், தேவசேனா அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். புஷ்பாஞ்சலிக்காக அழகும், மணமுமுள்ள மலர்களை (கேந்திப்பூக்களைத் தவிர) அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக கோயிலின் உள்துறைக் கண்காணிப்பாளரிடம் பக்தர்கள் வழங்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது


