தூத்துக்குடியில் கனமழையால் முற்றிலும் சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு வீரநாயக்கன்தட்டு பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 120 குடும்பங்கள் வசிக்கின்றோம். உப்பாற்று ஓடை ரவுண்டானா (திருச்செந்தூர் பிரதான சாலை) அதில் இருந்து எங்கள் பகுதிக்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் ஆகும்.
எங்கள் பகுதியில் இருந்து அனைத்து விதமான தேவைகளுக்கும் இந்த சாலையை பயன்படுத்திகின்றோம். இந்த சாலையானது 2014-2015 காலகட்டங்களில் போடப்பட்டது. சுமார் 10 வருடங்கள் ஆகிறது. 2023 பெரு வெள்ளத்தின் போது சாலையானது முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. மேற்படி இந்த சாலையானது உப்பாற்று ஓடை வடக்குப்புரம் கரையில் அமைந்துள்ளதால் அந்த கரையை உயர்த்தி அதன்மேல் சாலை அமைப்பதாக கூறினார்கள்.
கரையை உயர்த்துவதற்க்கான வேலை சுமார் 1½ ஆண்டுகளாக மந்தமாக நடைபெறுகிறது. மேற்படி 2024 டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் சாலை முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. அதன் பிறகு இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடிகிறது. பள்ளி வாகனமோ அவசர உதவிக்கு 108 வாகனங்களோ வந்து செல்ல முடியவில்லை. இதனால் சுமார் 30 மாணவ, மாணவிகள் நடந்தே 3கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.
ஆகையால் சேதமடைந்த சாலையை பள்ளி வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் சீரமைத்து கொடுக்க வேண்டும். மேற்படி அந்த கரையை உயர்த்துவதற்கு உப்பாற்று ஓடையில் உள்ள களிமண்ணை எடுத்தே கரையை உயர்த்தி அதன் மேல் சாலை அமைக்க உள்ளதால் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதைமடைய வாய்ப்புள்ளது. ஆகையால், சாலை அமைவதற்கான அந்த 3கிலோமீட்டர் வரை சரல்மண் வைத்து கரையை உயர்த்தி கூடிய விரைவில் புதிய சாலை அமைத்து தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


