செய்துங்கநல்லூர் பகுதியில் மருதூர் மேலக்கால் பாசன வசதி உள்ளது. இந்த பகுதிக்கு தாமிரபரணி 7 வது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வருகிறது. முத்தாலங்குறிச்சி, குட்டைக்கால், கொள்ளீர்குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர், தூதுகுழி, கருங்குளம், பெட்டைகுளம், கிருஷ்ணன் குளம், கால்வாய் குளம், அப்பன் குளம், வெள்ளூர் குளம், தென்கரைகுளம், மேலும் நாசரேத்தை சுற்றியுள்ள முதலை மொழிகுளம், நொச்சிக்குளம்,புதுக்குளம், தேமாங்குளம், வெள்ளரிக்காய் ஊரணி குளம் உள்பட பல குளங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சாத்தான்குளத்தில் உள்ள புத்தன் தருவை , வைரவன் தருவை , சடையனேரி போன்ற குளங்களை நிரப்ப சடையனேரி கால்வாய் திட்டமும் இந்த வழியாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 12 ஆயிரம் ஏக்கர் இந்த கால்வாய் வழியாக பாசன வசதி பெறும்.
இந்த பகுதியில் கார், பிசானம் , முன்கார் ஆகிய மூன்று சாகுபடி நடைபெறும். வடகிழக்கு பருவமழை, தென் மேற்கு பருவ மழை மூலமாக இங்கு பாசனம் நடைபெறும். சிறிது காலமாக தென் மேற்கு பருவ மழை பெய்தாலும், ஆற்றில் போதுமான தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவமழையும் செப்டம்பர் மாதம் துவங்கவேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் ஆன பிறகே வடகிழக்கு பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ந்தேதி வெள்ளம் வந்த பிறகு தாமிரபரணியில் வெள்ளமும் வரவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் தாமதமாக பிசான சாகுபடியை துவங்கினர். தற்போதுதான் நடவு பணியை ஆரம்பித்துள்ளனர். கிட்டத்தட்ட பிசான சாகுபடி மூன்று மாதம் கழித்து துவங்கியது. இந்த நிலையில் தற்போது வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சார்பாக இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக முத்தாலங்குறிச்சி, செய்துங்கநல்லூர் உள்பட பகுதியில் நாற்று நடப்பட்ட பகுதியில் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் வெள்ளம் வந்தால், மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்படும் காரணத்தினால் கரை யோரத்தில் வசிக்கும் மக்கள் உயரமான இடத்துக்கு வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


