கோவில்பட்டியில் புதிதாக அமைக்கப்பட உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கான கட்டடத்தை மாவட்ட அமர்வு நீதிபதி வசந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டிக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு அலுவலக வளாகத்தில் செயல்படும் நீதிமன்ற கட்டடங்களில், தற்போது அமைய உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கான கட்டட வசதி இல்லை. இதற்கிடையே, நீதிமன்றத்துக்கு எதிர்புறம் உள்ள பிஎஸ்என்எல் வளாகத்தின் தரைத்தளம் வாடகைக்கு விடப்படும் நிலையில், அங்குள்ள வசதிகள் குறித்தும், அந்த இடம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் செயல்படுவதற்கு சரியான இடமா என்பது குறித்தும் மாவட்ட அமர்வு நீதிபதி வசந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சார்பு நீதிமன்றம் அருகே உள்ள காலி இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடங்களையும், சம்பந்தப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தலைமை குற்றவியல் நீதிபதி வசித்குமார், கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சங்கர் கணேஷ், செயலர் ஜெயசீலன், துணைத் தலைவர் சிவன்பாண்டி, பொருளாளர் ரேவதி, துணைச் செயலர் முனீஸ்வரி, அரசு வழக்குரைஞர் சம்பத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


