சென்னை- தூத்துக்குடி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரயில்வே திருத்த மசோதாவில் (2024) கனிமொழி எம்.பி. பேசியதாவது: நாட்டில் உள்ள மற்ற அனைத்து ரயில்வேக்களை விட தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உள்பட்ட ரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கிறது. உணவு மற்றும் கழிவறை வசதிகளின் தரம்கூட மிக மோசமானதாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும்போது மத்திய அரசு ரயில்வே துறை தனியார்மயமாக்கலை முன்மொழிகிறது.
இப்படி ரயில்வே துறையை மத்திய அரசு கைகழுவுவது சரியல்ல. எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் கூடுதல் ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும். சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் ‘வந்தேபாரத்’ ரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


