விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய விழாக்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது. விடுமுறை தினத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் கோவில் கடற்கரையில் குவிந்தனர்.
அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


