தமிழக ஊடகங்கள் வடகிழக்கு பருவமழையினை ஏதோ சென்னைககு ஏதோ அணுகுண்டு மிரட்டல், இஸ்ரேலிய மக்களை போல பதுங்குகுழிக்குள் தங்கும் பயிற்சி எனும் அளவு பயமுறுத்துகின்றது, இது சரியல்ல
தமிழகம் தென்கிழக்கு பருவமழையால் அதிக மழை பெறும் மாகாணம் அல்ல, அதன் உயிர்நாடி வடகிழக்கு பருவமழை
இந்த மழைதான் அடுத்த ஒருவருடத்துக்கான நீர் தேவையினை ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என நிரப்பி தரும், இந்த மழைதான் தமிழக அரிசி உற்பத்தி காய்கறி உற்பத்திக்கும் தொழிலுக்கும் அடித்தளம்
இந்த மழை கொடுக்கும் பலம் தான், இந்த நீர் ஆதாரம்தான் ஒருவருடம் நிலத்தடி நீராக நின்று தமிழகத்தை காக்கும்
தமிழகம் வற்றா நதிகள் கொன்ட பூமி அல்ல, செழுமை கொண்ட ஆறுகள் அமைந்ததும் அல்ல
இங்கு தாமிரபரணி தவிர எல்லாமும் கோடையில் வற்றிவிடும், ஒரு சொட்டு இல்லாமல் காய்ந்துவிடும், இந்த மாகாணம் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றது, அதற்கு ஆதாரம் ஏரிகள் குளங்கள்
அதற்கு பெரும் ஆதாரம் இந்த மழை
இதை அறிந்துதான் முன்னோர்கள் அவ்வளவு ஏரிகளை வெட்டினார்கள், வைகை எனும் நதி கடலுக்கே செல்லாத அளவு அது ஏரிகளுக்கும் கன்மாய்க்கும் திருப்பி விடப்பட்டது
திரும்பும் இடமெல்லாம் பிரமாண்ட ஏரிகளை அன்றே வெட்டிவைத்தார்கள்
அன்றைய காஞ்சிபுரம் செங்கல்பட்டு என தொண்டை நாடெங்கும் ஏகப்பட்ட ஏரிகள் இப்படி அமைந்திருந்தன, அந்த நீர்வளத்தை கண்டுதான் பிரிட்டிஷார் சென்னையில் அத்தனை ஆலைகளை கட்டினார்கள்
இந்த மழை இல்லையென்றால் தமிழகம் இல்லை, தமிழக பொருளாதாரமில்லை, நெல் காய்கறி கரும்பு என எதுவுமில்லை
தொழிற்சாலைகள், மாடு ஆடு கோழி என எதுவுமில்லை
தமிழகத்துக்கு இது தனிவரம், இந்த மழை மிக மிக முக்கியம்
அதனால் இந்த பத்திரிகை அலப்பறைகளை கடந்து, வெற்று அரசியல் குழப்பங்களை கடந்து மழை நன்றாக பெய்து மாகாணம் செழித்து நாட்டிற்கு பலமாய் நிற்கவும், எல்லா மக்களும் எல்லாம் பெற்று நிறைந்து வாழவும் பிரார்த்திப்போம்
இந்த மழைதான் வாழ்வு, அதை தரும் அம்மனை மாரியம்மன் என சொல்லி அவளுக்காய் தீமிதித்து , நெருப்பு சட்டி ஏந்தி கண்ணீர்விட்டு மன்றாடிய சமூகம் இது
அந்த மழையின் அவசியமும் அருமையும் அப்படி, அதனால் அந்த பெருமழை நன்றாக கொட்டி மாகாணம் செழுமையுற பிரார்த்திப்போம்
அற்ப அரசியலுக்கும் அதை கொண்டு சென்னை மக்களே தங்களுக்கு தாங்கள் தேடி கொண்ட ஆபத்துக்கும் அந்த புனிதமான சக்திவடிவான உயிரான மழையினை குறை சொல்ல முடியாது கூடாது
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்”
என மலர்தூவி பாடி அதனை வரவேற்போம், எல்லா மக்களுக்கும் எல்லா உயிர்க்கும் தாயாய் அந்த வானம் தன் கடமையினை செய்து படியளக்கட்டும்.


