திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழாவின் 5-ஆம் நாளானநேற்று சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஆக. 24ஆம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
5ஆம் திருநாளான நேற்று மாலையில் மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளி அம்மனும் சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, இரவு 7.30 மணியளவில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.
அப்போது எதிர்சேவையாக தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஸ்ரீ ஜெயந்திநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இன்று (ஆக.29) வியாழக்கிழமை காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வருகிறது. நாளை (ஆக. 30) வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேர்கிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.


