வாழை படத்தில் முக்கிய நிகழ்வான வாழைக்காய் லாரி சாய்ந்து 19 பேர் பலி என்ற சம்பவம் பிப்ரவரி 1999ல் நடந்த போது நான் செய்துங்கநல்லூர் பகுதியில் தினகரன் நாளிதழ் நிருபராக இருந்தேன். அந்த சமயத்தில் புளியங்குளம் மக்கள் அடைந்த துயரை தினமும் நாளிதழில் செய்தியாக பிரசுரம் செய்திருந்தேன். அது குறித்த சம்பவங்களை பேட்டியாக தம்பி சிதம்பரம், சத்யம் டிவிக்காக கேட்டு இருந்தார். அதை 5 நிமிட செய்தி தொகுப்பாக சத்யம் டிவியில் ஒளிபரப்பு செய்துள்ளார்கள். தம்பி சிதம்பரத்துக்கும், சத்யம் டிவி நிர்வாகத்துக்கும் நன்றி.
படம் பார்க்கும் முன்பு பதிவிட்ட பேட்டி இது. இந்த படம் 1999 ல் நான் புளியங்குளத்து மக்களை பார்த்த போது எப்படி இருந்தார்களோ, அவர்களோடு சினிமா முடியும் வரை பயணித்த உணர்வு என்னிடம் இருந்தது. மணிநாடார் த.மா.கா. சைக்கிள் சின்ன தேர்தல் சுவரொட்டி, பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் ராமராஜன் போட்டியிட்டது. செய்துங்கநல்லூர் சென்ரல் தியேட்டரில் பூவே உனக்காக படம் ஓடுவதாக போஸ்டர் என அந்த காலங்கள் அப்படியே சினிமா பார்க்கும் போது நிழலாடியது. நான் படித்த கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளியாக காட்டிய போது மிகவும் சந்தோசமாக இருந்தது. மணி நாடார் எம்.எல்.ஏவுடன் உதவியாளராக அப்போது நான் இருந்தேன். செய்துங்கநல்லூரில் எம்.எல்.ஏ ஆபிசில் வைத்து , 19 பேர் குடும்பத்துக்கு முதல்வர் கலைஞர் மூலமாக தலா 50ஆயிரம் பணம் கிடைக்க மனு தயார் செய்தோம். புளியங்குளம் ஊர் பெரியவர்கள் மூலமாக அதை சென்னை எடுத்து சென்று மணி நாடார் எம்.எல்.ஏ அண்ணாச்சியை சட்டமன்றத்தில் பேச வைத்து உடனே பணம் பெற்றோம். அதை அப்போதைய மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கீதா ஜீவன், பெரியசாமி எம்.எல்.ஏ உள்பட முக்கிய பிரமுகர்கள் வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கொடுத்த அந்த காலங்கள் இப்போது நினைவுக்கு வருகிறது. லெட்சுமணன் அவர்களுக்கு அண்ணாவிருது கிடைக்கும் முன்பு அவருடைய வீரதீர செயல்களை தினகரன் பத்திரிக்கையில் எழுதியது எல்லாம் மனதில் நிழலாடுகிறது. அவருக்கு அண்ணா விருது கிடைத்த செய்தியையும் வெளியிட்டோம். படம் பார்த்த பிறகு, தற்போது நாங்கள் சொல்லும் இந்த சம்பவங்களை வாழை இரண்டாம் பாகம் எடுத்து பதிவு செய்யலாம் என மண்ணின் மைந்தன் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறோம். வாய்பிருந்தால் இந்த வீடியோவை பார்த்து கருத்தை பதிவிடுங்களேன் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


