மைசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூரில் வைத்து கடந்த 24 மற்றும் 25ஆம் தேதிகளில் 27 வது சிட்டோரியோ கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 20 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் மாஸ்டர் ஆர் கே பள்ளி சார்பில் 15 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகள் கட்டா மற்றும் சண்டை குழு பிரிவு போட்டி என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். இதில் தூத்துக்குடி சாரதா பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மகரிஷி என்ற 8 வயது மாணவன் இரண்டு வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு தங்கப் பதக்கம் பெற்று வருகிற டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிட்டோரியோ கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்த சாதனைகள் படைத்து ரயில் மூலம் தூத்துக்குடியில் ரயில் நிலையத்திற்கு வந்த மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஏராளமானோர் பாராட்டினர்.


