செய்துங்கநல்லூரில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். இவரிடம் கள்ளநோட்டை கொடுத்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பைக்கில் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் காசி மகன் முத்துக்குமார்(28). பாளை அருகே திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் கருத்தப்பாண்டி(35). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை 4 மணி அளவில் பைக்கில் செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க்கிற்கு வந்தனர். பைக்கிற்கு பெட்ரோல் போட்டு விட்டு 2000 கள்ள நோட்டை பங்க் ஊழியரிடம் கொடுத்தனர்.
நோட்டை பார்த்த ஊழியர் வேறு நோட்டு தரும்படி கூறியுள்ளார். மீண்டும் பர்சிலிருந்து மற்றொரு கள்ள நோட்டை எடுத்து கொடுத்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செய்துங்கநல்லூர் எஸ்ஐ சதீஷ் மற்றும் போலீசார் பங்க்கிற்கு வந்து விசாரிக்கவே 2 பேரும் பைக்கில் தப்பியோடினர். இருப்பினும் அவர்களை போலீசார் பைக்கில் விரட்டவே கருத்தப்பாண்டி மட்டும் சிக்கினார். முத்துக்குமார் தப்பியோடி விட்டார்.
கருத்தப்பாண்டியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு இந்த கள்ளநோட்டுகளை கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த முருகன் மகன் மாடசாமி (48). அவரது தம்பி மாரியப்பன் (48). அய்யனார்குளம பட்டியை சேர்ந்த முருகன் மகன் சங்கரபாண்டி ஆகியோர் கொடுத்தது தெரியவந்தது. உடனே அவர்கள் 3 பேரையும் போலிசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
அவர்களிடம் இந்த கள்ளநோட்டுகளை கொடுத்தது யார்? இதன் பின்னணியில் யார் யார் இருக்கின்றனர்? கேரளாவைச் சேர்ந்த கள்ளநோட்டு கும்பலுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் 4 பேரிடம் போலீசார் எந்த கள்ளநோட்டையும் கைப்பற்றவில்லை. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடி முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.


