உலக புத்தக தினத்தை முன்னிட்டு எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதி தி நெல்லை டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த பொருநை முதல் நயாகரா வரை ” பயணக்கட்டுரை நூல் வெளியீட்டு விழா பாளை ராஜேந்திர நகர் சரோஜ் நினைவகத்தில் நடைபெற்றது. ம.தி.தா.இந்துக் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேரா.வி.பொன்னுராஜ் நூலை வெளி யிட, ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத் தலைவர் செ.முத்துக்குமாரசாமி நூலைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் வண்ணமுத்து தலைமை தாங்கினார். லயன் தம்பான் முன்னிலை வகித்தார்.
பேரா.பொன்னுராஜ் பேசும்போது “நூலை வாசிக்கையில் அவரு னேயே நாமும் கனடாவை நோக்கிப் பயணிக்கும் உணர்வு ஏற்பட்டது. அவர் மேபெல் இலைச் சருகுகளை மிதிக்கும் போது, நாமும் மிதிக்கிற உணர்வு. பனிக்கட்டியில் அவர் கால் வைக்கிறபோது, நம் கால்களும் சில்லிடுகின்றன. கனடாவில் உள்ள மூத்த தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களைச் சந்தித்தது, கனடா இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றது. கனடா ஜப்பான் நல்லுறவின் அடையாளமாய்த் திகழும் கரியா பூங்கா, அங்கு வாழும் கறுப்பு அணில்கள், வாத்துகள் எனப்பல விசயங்கள் நம்மை ஈர்க்கின்றன.
அங்குள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள், சாலையோரம் நிகழும் இசைக்கச்சேரிகள், தனி வீடுகளில் வாழும் வயதான முதியோர்கள், அவர்தம் உணவுப்பழக்கங்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் நயாகரா பேரருவி என கட்டுரை பயணிக்கிறது. அமெரிக்காவையும் கனடாவையும் இணைப்பதே இந்த நயாகரா அருவி தான் என்பது பலரும் அறிந்திருக்காத விசயம். வண்ணப்படங்களுடன் நல்ல லே அவுட்டில் வெளிவந்துள்ள, காபி டே புக் என்று சொல்வார்களே, அது போன்ற அழகிய நூல் இது. 200 ரூபாயில் கனடாவைச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர் “என்றார். விழாவில் பாடலாசிரியர் தமயந்தி, மரு.ராமானுஜம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எழுத்தாளர் சி.அன்னக்கொடி, எழுத்தாளர் எம்.எம்.தீன், தமுஎகச மாநிலத் துணைச்செயலாளர் லட்சுமிகாந்தன், கணபதி சுப்பிரமணியன், தாணப்பன், கவிஞர் பாமணி, மணிகண்டன், வட்டாட்சியர் செல்வன், ஜெயசிங், பேரா ஹரிஹரன், கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி, இளம் எழுத்தாளர் சூடாமணி உள்ளிட்டோர் வாழ்த்திப்
பேசினர். முன்னதாக நாடக இயக்குநர் சந்திரமோகனின் கவிதை கவி நா க அரங்கேற்றம் நடைபெற்றது. சேது தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் நாறும்பூநாதன் ஏற்புரை நிகழ்த்தினார்.


