கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனித் திருவிழாவும் ஒன்று.
11நாள் நடைபெறும் இந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், சண்முராஜ், நிருத்தியலட்சுமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் , கோவில் ஆய்வாளர் சிவகளை பிரியா, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழா, இன்று தொடங்கி வரும் 15-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் நடக்கிறது. இவ்விழா நாள்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
9-ம் திருநாளான வரும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான வரும் 14-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, தீபாராதனையும் நடக்கிறது. 11-ம் திருநாளான வரும் 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்


