ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் உடனே அமைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு தொல்லியல் வரலாற்று ஆவணம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அவர்கள் ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் செய்துவருகின்றனர். இதற்காக திருவண்ணாமலை வரலாற்று பழமையை ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையில் பழந்தமிழர் வரலாற்றை வெளி கொணர வேண்டும் என முடிவு செய்து அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்து வந்தனர். வரலாற்று பயணமாக தென்தமிழகத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். மேலும் நெல்லை மாவட்டம் மருகால் தலை, கிருஷ்ணாபுரம், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஆழ்வார் திருநகரி, கொற்கை, ஆகிய பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த பயணத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் பிரகாஷ், செயலாளர் பாலமுருகன், துணை தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் ஆதிச்சநல்லூர் வந்தனர். அவர்கள் ஆய்வு நடந்த இடம், படித்துறை, புதிதாக அருங்காட்சியம் அமைக்க கூடிய புளியங்குளம் தகவல் மைய கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின் அவர்கள் நிருபர்களிடம் பேட்டியளித்தனர். அப்போது துணை தலைவர் நெடுஞ்செழியன் கூறியதாவது.
உலகநாகரீகத்தில் தொட்டில் என புகழப்பட கூடிய ஆதிச்சநல்லூர் குறித்து பல ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்து உள்ளது. எனவே அந்த இடத்தினை காணவேண்டும் என ஆவலோடு வந்தோம். ஆனால் எந்த இடத்திலும் அதற்கான சுவடுகள் இல்லை. திருவண்ணாமலையில் இருந்து காரில் பயணத்து இதை பார்த்து விட்டு வெறுமையாக திரும்பி செல்லவேண்டிய நிலை உள்ளது. மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி வேலி போடும் பணி மட்டுமே நடந்து வருகிறது. மற்ற பணிகள் எதுவுமே நடந்தது போல தெரியவில்லை. ஆதிச்சநல்லூர் 3500 வருடங்களை கடந்த நாகரீகம் கொண்டது. இங்குள்ள முதுமக்கள் தாழிகள் மிகவும் விசேஷமானது. பாட நூல்களில் உள்ளது போல இங்கு எதுவுமே இல்லை என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம். இங்கு கட்டி வைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தில் அருங்காட்சியம் அமைக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.
என்று கூறினார்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பி கொற்கைக்கு சென்றனர்.


