கடையம் மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம். இது அம்பாசமுத்திரத்தையும் தென்காசியையும் இணைக்கும் சாலையில் உள்ளது. இங்கு உள்ள இடங்களைப் பார்க்க தொல்லியல் துறை மாணவ மாணவிகளுடன் சென்றிருந்தோம். அந்த ஊருக்கு அருகே உள்ள குலுக்கை மலையில் ஏறினோம். அந்த மலையில் ஒரு குகை இருந்தது. அதிக எதிர்பார்ப்புடன் அதனைப் போய் பார்த்தோம். சிறந்த உடற்பயிற்சி மட்டுமே மிஞ்சியது. ஆனால் எதுவும் கைகூடவில்லை.
மலையிலிருந்து இறங்கி வந்தோம். கீழே எங்களை எதிர் பார்த்து ஒரு பத்திரிகையாளர் காத்திருந்தார். அவர் அதிக உயரமாகவும் இல்லை. குள்ளமாக இல்லை. ஆனால் சற்று பெரிய உடலமைப்பைப் பெற்றிருந்தார். எங்களுடன் வந்த முத்தலாங்குறிச்சி காமராசு இந்த பத்திரிகையாளரை என்னிடம் அறிமுகப் படுத்தி வைத்தார். இவரின் பெயர் பாரதி. இவரைக் கடையம் பாரதி என அழைக்கிறனர். பெயர்க் காரணம் கேட்டேன்.
“கடையத்தில்தான் மகாகவி பாரதியாரின் மனைவி பிறந்தாராம். திருமணத்திற்குப் பிறகு மகாகவி பாரதியார் கடையத்தில் பல வருடம் இருந்தாராம். இந்த மகாகவி நினைவாகவே இந்த பத்திரிகையாளருக்கு பாரதி” எனப் பெயர்சூட்டினார்களாம்.
“மலை மேலே எதாவது கண்டுபிடித்தீர்களா?” என பாரதி என்னிடம் கேட்டார்.
“எதுவும் இல்லை. ஆனால் நல்ல உடற்பயிற்சி மட்டுமே கிடைத்தது” என்றேன்.
அடுத்து நிறையப் பேசினார். கடையம் சுற்றியுள்ள பகுதிகளைக் கரைத்துக் குடித்து வைத்திருந்தார். தொல்லியல் சார்ந்த இடங்களை நன்கு அறிந்து வைத்திருந்தார். தொல்லியலில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.
“தன்னிடம் பழைய பொருட்கள் இருப்பதாகவும்; அவைகள் மாணவர்களுக்குப் பயன்படும் எனவும்; அதனைத் தருகிறேன். வாங்கிக் கொள்வீர்களா?” என பாரதி என்னிடம் கேட்டார்.
கரும்பு தின்னக் கூலியா? என் நினைத்துக் கொண்டு, “தாருங்கள். எடுத்துச் செல்கிறேன்” என்றேன்.
“ஒரு ஆட்டோவைக் கூப்பிடுங்கள்” என்றேன். ஆட்டோவும் வந்தது.
” கடையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல எவ்வளவு வேண்டும்?” எனக் கேட்டேன்.
“1000 ரூபாய் கேட்டார். 900 தருகிறேன்” என்றேன். ஆட்டோக்காரர் ” சரி” என்றார். ஆட்டோவை பாரதிவிட்டிற்கு அனுப்பி வைத்தேன்.
ஆட்டோவில் இரண்டு பழமையான குதிர்களையும் ஒரு பழங்கால கவண் கல்லையும் அனுப்பி வைத்தார். குதிர்கள் நெல் போன்ற தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். இரண்டும் அழகு வேலைப்பாட்டுடன் இருந்தது.
இவை இப்போது எங்கள் அருங்காட்சியகத்தை அழகூட்டிக் கொண்டிருக்கிறது.
“எங்களைப் பார்த்ததும் எங்களுக்கு என் செய்யலாம்?” என்று சிந்தித்த கடையம் பாரதி மறக்க முடியாத மனிதர்.
பின்னர் இருவரும் கடையத்தைச் சுற்றி பல கிலோமீட்டர் தூரம் சேர்ந்து காலாற நடந்தோம் மற்றும் நிறைய சேர்ந்த பயணித்தோம். இப்படி எனக்கு நல்ல நட்பு ஒன்று கிடைத்து மட்டற்ற மகிழ்ச்சி..


