தண்ணீரே தண்ணீரே
வானருவியாய்
வருகின்ற தண்ணீரே
நன்னீராய் தவழ்ந்து வந்து
நாடெல்லாம் செழிக்க
வைக்கும் தண்ணீரே
காடுகள் மலைகள்
செடி கொடிகளை
தழைக்கவைக்கும் தண்ணீரே
மேடுகள் பள்ளங்கள்
பறவைகள் உயிரினங்களை
வாழவைக்கும் தண்ணீரே
வயல்வெளிகளை வளர
வைத்து மனிதர்களுக்கு
வாழ்வளிக்கும் தண்ணீரே
செயல்வடிவாய் ஆலைகள்
சாலைகளென யாவற்றையும்
சுழலவைக்கும் தண்ணீரே
விசையாய் சக்தியாய்
ஒளிதந்து வழிகாட்டும்
தடையில்லாத் தண்ணீரே
வற்றாது செல்வங்களை
தந்து எல்லோரின்
தாகம்தீர்க்கும் தண்ணீரே
நாகரீகம் அமைத்து தந்து
பூர்வீகம் மக்களின் வரலாற்றுச்
சுவடுகளைதந்த தண்ணீரே
இன்றுகளையிழந்து மாசால் மணல் வற்றி உன்னிடத்தை
பறிகொடுத்துவரும் தண்ணீரே
பாய்ந்துபோகும் உன்னிடத்தில்
மீன்கள் போல் நெகிழியெங்கும்
நீந்துதே….தண்ணீரே
பூக்கடையாயிருந்த உன்னிடம் சக்கடயாய் மலம் ஜலம் அள்ளி
வீசுகின்றோம் தண்ணீரே
போக்கடையின்றி நீயும்
உன்போக்கில் அதையும்
சுமந்துசெல்கின்றாய் தண்ணீரே
உன்னைக்காக்க மறந்திட்டால்?
உலகம் விஷமாய்
போய்விடும் தண்ணீரே..!
உலகம் புகழும் உன்திருநாளில்
ஒன்றுகூடி உனைத் தொழுது
உன்னைப் பேண சபதம்
ஏற்போம் தண்ணீரே….
ஜீவனாய் வாழும் உன்னை
வணங்குகின்றோம்
போற்றுகின்றோம்…தண்ணீரே
கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
விக்கிரமசிங்கபுரம்


