தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது.
இந்த ஆதிச்சநல்லூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் காட்சிப்படுத்தி சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. அதை கடந்த வருடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இதையடுத்து ஆதிச்சநல்லூரை பார்வையிட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ மாணவிகள் 50 பேர் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட வருகை தந்தனர். அவர்கள் சைட் மியூசியம் மற்றும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார்.
அதைத் தொடர்ந்து சி சைட்டையும் நேரில் பார்வையிட்டனர். அங்கு தொல்லியல் ஆய்வு மாணவர் வெங்கடேஷ் விளக்கமளித்தார்.
இதில் மாணவ மாணவிகளுடன் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் பேச்சிமுத்து, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனைவர் வேல்முருகன், முனைவர் சண்முகலெட்சுமி உள்பட பலர் உடன் வந்திருந்தனர்.


