குலசேகரப்பட்டணம் இஸ்ரோ ஏவுதள வளாகத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதால் வருகிற 28ம் தேதி முதல் 29ம் தேதி வரை கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டணம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, உத்தேசமாக 28.02.2024 முதல் 29.02.2024 வரை (காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை) அட்ச தீர்க்க ரேகைகளிலிருந்து (Launch Pad Coordinates: Latitude 08° 22′ North, Longitude 78° 02′ East) ஒரு ரோகிணி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200) ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் மூலம் (ஸ்ரீஹரிகோட்டா Satish Dhawan Space Centre, SHAR) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேர்வில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரை கடலுக்குள் விரிந்து கிடக்கும் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28.02.2024 முதல் 29.02.2024 வரை (காலை 09.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை மீனவர்கள் / பொதுமக்கள் சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகள், மற்ற படகுகள், கட்டுமரம் வழியாக மேற்படி பகுதிக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


