திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவின் 8ஆம் நாளான இன்று பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 14ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.
8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு விஷ்ணு அம்சமாக சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.


