தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கேம்பலாபாத் 2வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் துபாயில் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சபீனா (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சபீனா குழந்தைகளுடன் கேம்பலாபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
உடன்குடியில் வசித்து வந்த சபீனாவின் உறவினர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். எனவே சபீனா தன்னுடைய குழந்தைகளுடன் உறவினரின் துக்க வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று மாலையில் சபீனா குழந்தைகளுடன் கேம்பலாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் உள்ள சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 111 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சபீனா இதுகுறித்து தனது கணவருக்கும், ஆழ்வார்திருநகரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன், ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.
சபீனாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடுபுகுந்து துணிகரமாக நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதற்கிடையில் நேற்று இரவு சபீனா வீடுகளை சரி செய்தபோது கம்மல், செயின் என சுமார் 20 சவரன் நகை கட்டில் கீழே கிடந்தை எடுத்தார். இதுகுறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். 20 சவரன் நகை கிடைத்த நிலையில் மீதம் உள்ள 91 சவரன் நகையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


