முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து பர்மாவில் வாழுகிறான். அங்கே அவனுக்கு வெள்ளத்துரை என்ற மகன் பிறக்கிறான். கொலை குற்றத்தினை மறந்து செல்வச்செழிப்பாக வாழ்கிறது அந்த குடும்பம். ஆனால் இரண்டாம் உலகப்போரில் உடமைகளை எல்லாம் இழந்து சொந்த ஊருக்கு அகதிகளாக இவரது குடும்பம் வரும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் மாரடைப்பால் ராஜத்துரை இறந்துபோகிறார். இதனால் இவர் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. அதே வேளையில் ராஜத்துரையை கைது செய்ய போலீசும் வந்து நிற்கிறது.
இனி.
செல்லையா கண்களில் நீர் மல்க பேசினார்.
“யய்யா இங்க பாரும். உம்ம போலீஸ் பிடிக்காது. அப்படியே பிடிச்சா நீர் தைரியமா போரும். உம்மை நான் எப்படியாவது வக்கீலை வச்சி வெளியே கொண்டு வருவேன். அது மட்டுமில்லையா. நீர் ஜெயில இருந்து வருத வரைக்கும் உம்ம மனைவி என் மவய்யா. உம்ம பிள்ளை என் பேரப்பிள்ளைய்யா. நான் அவியளுக்கு அரணா இருந்து காப்பாத்துவய்யா”.
நான்கு பேரும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
நான்கு பேர் அழுகையும் படுக்கையில் கிடந்த செல்லையாவின் மனைவிக்கு கேட்டு இருக்க வேண்டும். அவள் இறுமிய படி “யாரு வந்திருக்கா” என்றாள்.
“ம். உம் மவளும் பேரனும் வந்திருக்காவ”. என்றான் செல்லையா.
அது அவளுக்கு கேட்டதோ இல்லையோ, ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
அன்று இரவு வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார் ராஜத்துரை. அவருக்கு வேர்த்துக் கொண்டிருந்தது. அதை கண்டு பிடித்து விட்டாள் லெட்சுமி.
“என்னங்க ஒரு மாரி வேக்குது”.
“ஒன்னுமில்லை. இடம் மாறுதுல்ல, அதான் புளுங்குது”
ரயில்வே நிலையத்தில் கொடுத்த வேஷ்டியை எழுந்து போய் கட்டினார். அங்கு மக்கள் கொடுத்த மூன்று பாயையும் விரித்தார் . நடுவில் இவர் படுத்துக்கொண்டார். மனைவியையும், மகனையும் இருபுறமும் வந்து படுக்கசென்னார். அவர்கள் படுத்தனர். அவரை மகனும் மனைவியும் இறுக்கி பிடித்த படியே இருபுறமும் படுத்து தூங்கி ஆரம்பித்தனர். ஆனால் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. நாளை காலை போலீஸ் வந்துவிடும். இவர்கள் இருவரையும் அனாதையாக விடப்போகிறேன்.
இன்று இரவு தான் அவரோடு அவர்கள் இருக்கப் போகிறார்கள் என்பதும். இனி எப்போதுமே பிரிந்து தான் வாழப் போகிறார்கள் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. கடவுள் வேறு மாதிரி கணக்கை போட்டார்.
*******
மறு நாள் காலை விடிந்தது.
மூன்று பேரும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள். செல்லையா அவர்களை எட்டிப்பார்த்தார். “சரி தூங்கட்டும். பாவம் அழுப்பு. எத்தனை நாள் கஷ்டப்பட்டார்களோ” என நினைத்தார் செல்லையா. “சரி நோயாளி மனைவி இறுமிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏதாவது காலையிலே கொடுக்க வேண்டும். அதற்குள் நாம் ஆற்றுக்கு போய் விட்டு வருவோம்” என கிளம்பினார்.
அப்போது தான் ராஜத்துரை சொன்னபடியே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜீப் அந்த ஊருக்கு வந்தது. சங்கமடத்தின் அருகில் வந்து வண்டி நின்றது.
போலீஸ்காரர்கள் ஜீப்பை விட்டு இறங்கினார்கள்.
அங்கிருந்தவர்களிடம் கேட்டனர்.
“ராஜத்துரை எங்க இருக்கான்”.
“தெரியலை எஜமான். ராஜத்துரைன்னா யாருன்னே தெரியாது” சொன்னவனை லத்தியால் ஓங்கி அடித்தார் ஏட்டையா. “ஏலே நேத்து சாயங்காலம் ஒருத்தன் ஊருக்குள்ள வந்திருக்கான். ஊருக்குள்ள உங்களுக்கு தெரியாமலேயா இருக்கும். அப்படின்னா களவாணி பயலுவ வந்து ஊருக்கு படுத்தாலும் உங்களுக்கு தெரியாது என்னலே”.
“எஜமான் அடிக்காதீய. வண்ணான் வீட்டிலத்தான் இருக்கான்”.
“எங்கலே வண்ணான் வீடு”.
“அன்னா தெரியுது பாருங்க. வெள்ளாவி அடுப்பெல்லாம் இருக்கு பாருங்க. அங்கத்தான்”.
போலீஸ் அந்த வீட்டை நோக்கி கிளம்பியது.
போலீஸ் வந்த விவரம் ஆற்றில் நின்ற செல்லையாவுக்கு தெரிந்தது. அவர் ஆத்தில் இருந்து வீட்டுக்கு வேகமாக ஓடியே வந்தார். “அய்யோ முதலில் தெரிஞ்சி இருந்தா. எங்கயாவது ஓடிச்சொல்லியிருக்கலாமே” என நினைத்தார். படபடப்புடன் ஓடி வந்தார்.
அதற்குள் போலீஸ் செல்லையா வீட்டுக்குள் சென்று ராஜத்துரை படுத்திருந்த அறையை எட்டிப்பார்த்தனர்.
அங்கே…
ராஜத்துரையை கட்டிப்பிடித்தப்படி, லெட்சுமியும், வெள்ளத்துரையும் படுத்துக்கிடந்தனர்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் அந்த காட்சியை பார்த்தார் , “ஏட்டு தூங்குகிறவன் எந்திருக்கட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்” என்றார்.
பாவம் தூங்குகிறவனை பார்க்க அவருக்கு பாவமாக இருந்தது. மேலும் ராஜத்துரை கேஸ் கட்டையெல்லாம் படித்திருந்தார். அவருக்கு இவன் கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது போலத்தான் தெரிந்தது. ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் அல்லவா?. ஆகவே தான் வந்திருந்தார்.
சர்க்கிள் ஜீப்பில் போய் அமர்ந்து கொண்டார்.
செல்லையா ஓடியே வந்தான். “ எஜமான். எஜமான்” என்று சர்கிள் இன்ஸ்பெக்டர் முன்பு துண்டை எடுத்து கையில் போட்டுக்கொண்டு முட்டிப்போட்டு நின்றான்.
“யோவ் போய் அவனை எழுப்பி கொண்டு வாருமே”. என்றார் சர்கிள்.
“சரி எஜமான்”. செல்லையா தனது வீட்டை நோக்கி ஓடினார்.
ராஜத்துரையை எழுப்பினார்.
“யய்யா. யய்யா எழுந்திருங்கய்யா”. என்றார்.
ஆனால் அவர் அசையவில்லை.
லெட்சுமி விழித்து கொண்டாள். வெள்ளத்துரையும் விழித்து கொண்டான். ஆனால் ராஜத்துரை தூங்கி கொண்டிருந்தார். லெட்சுமி ராஜத்துரையின் உடலை தொட்டுப்பார்த்தாள். ஜில் என்று இருந்தது. அவரது மூச்சை தொட்டுப்பார்த்தாள். மூச்சே இல்லாமல் மூர்ச்ச¬யாக கிடந்தார் ராஜத்துரை.
“என்னங்க” லெட்சுமி சத்தமிட, நிலமையை புரிந்து கொண்டு “யய்யா” என அலறினார் செல்லத்துரை. அருகில் இருந்த வெள்ளத்துரையும், “யப்பா எங்களை விட்டுட்டு போயிட்டியளே” என கதறினான்.
ஊரே ஸ்தபித்தது. ஊர் மக்கள் எல்லோரும் கூட்டமாக ஓடியே வந்தனர்.
கேள்வி பட்ட இன்ஸ்பெக்டர் தனது தொப்பியை கழற்றி விட்டு, எழுந்து மரியாதை நிமித்தமாக நின்றார்.
“என்னம்மா நடந்துச்சு”, செல்லையா கேட்டார்.
“நேத்து ராத்திரி வேத்துக்கிட்டு இருந்தாவ, என்ன ஏதுன்னு கேட்டேன். புது இடம் அதுதான் வேக்குதுன்னு சொன்னாவ”. விம்மி விம்மி அழுதாள்.
அருகில் நின்ற சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அதை கேட்டுக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். “ம். இந்த பெண் வெள்ளக்காரி மாறி இருக்கா. ஆனா நல்ல தமிழ் பேசுதா. பாவம் இப்போ புருசனை இழந்து நிக்காளே”. யோசித்துக்கொண்டே ஜீப் அருகில் வந்தார்.
அவர் மனது சொன்னது. “தவறே செய்யாத கொலை யாளியான இவர் ஜெயிலுக்கு போகக்கூடாது என்று எமன் இவர் உயிரை நெஞ்சுவலியால் பறித்துக்கொண்டு போயிட்டான் போல”
அழுதபடியே போலீஸ் இடம் வந்தார் செல்லையா.
“எஜமான் என்ன செய்யணும். நீங்க என்ன சொன்னாலும் கட்டுபடுதேன்”.
சர்க்கிள் யோசித்தார்.
“இவர் இறப்பில சந்தேகம் இருந்தா தூக்கிட்டு போய் போஸ்ட் மார்ட்டம் பண்ணணும். சந்தேகம் எதுவும் இல்லை. மாரடைப்புத்தான் மரணத்துக்கு காரணம்”.
செல்லையாவை கூப்பிட்டார்.
“யோவ் செல்லையா. இப்போ நாங்க ராஜத்துரை உடலை தொட்டா பல பிரச்சனை இருக்கு. நான் நல்லா யோசனை பண்ணி பாத்தேன். இவரு நல்லவருதான். பாவம் மண் மேலே நல்ல பாசம் கொண்டவரு. அதனால நாடு விட்டு நாடு சுத்தினாலும் மண்ணுக்கே வந்து சேந்துட்டாரு. நல்லபடியா அடக்கம் பண்ணுங்க. நாங்க கிளம்பிறோம்”.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஏற ஜீப் கிளம்பியது. சிறிது தூரம் சென்றது . அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
ஏட்டையா கேட்டார். “அய்யா ராஜத்துரை மேலே இருக்கும் கொலை கேஸ் என்ன ஆகும்”.
“மேலதிகாரிக கிட்டத்தான் கேட்கணும். ஆனால ஒரு மனிசன் இறந்து போயிட்டா, அவனை எப்படி கூண்டுல ஏத்த முடியும். எப்படி ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க முடியும். அநேகமா இந்தவழக்கு இவர் சாவோட முடிஞ்சி போச்சு”.
ஏட்டையா சொன்னார். “அய்யா. இவன் அந்த கொலையையும்மே செய்யலை”.
“எனக்கு தெரியும். இந்த ஊருல கொலையை செஞ்சி இவன் மேலே பழியை போட்டவன் கல்லு மாரி இன்னும் உயிரோட இருக்கான். ஜமீன் ஊருல கொலை செஞ்ச காவல்காரன் மனைவியும் கல்லு மாரித்தான் இருக்கா. பாவம் பழியை சுமந்தவன் கடைசியில பெண்டாட்டி பிள்ளையை இழந்து போய் நிக்கான்”.
அமைதியாக இருந்தார்.
“கொலை செஞ்சா நிச்சயம் தண்டனை உண்டு. அது தான் நியதி. கடவுள் இவன் நிரபராதிங்கறதால நம்ம கையில மாட்ட விடாம உயிரை எடுத்துக்கிட்டாரு போலும்”.
விரக்தியாக சிரித்தார் சர்க்கிள்.
“எனக்கு இந்த கடவுள் மேலே நம்பிக்கை இருக்கோ இல்லையோ, ஆனா உண்மை மேலே நம்பிக்கை இருக்கு. அதுதான் இப்போ ஜெயிச்சும் இருக்கு. ம். சரி எப்படியோ ஒரு கேஸ் முடிஞ்சுது”.
ஜீப் வேகமாக அருகில் உள்ள சிறு நகரத்தினை நோக்கி விரைந்தது.
ராஜத்துரை பற்றிய விவரம் காட்டுத்தீ போல பரவியது அவரை பார்க்க ஊர் மக்கள் அனைவரும் வந்து நின்றனர்.
ஒரு பாட்டி சொன்னாள், “ராஜத்துரை எப்பேற்பட்ட ஆளு அவன் மட்டும் இல்லைன்னா நம்ம ஊருல காரைக்கட்டிடம் கட்டியிருக்கவே மாட்டோம். அவன் தான் எல்லா வேலையையும் தூக்கி போட்டுக்கிட்டு அலைஞ்சான்”.
சிறுமி ஒருத்தி கேட்டாள். “அப்புறம் ஏன் பாட்டி இவரை நேத்துபுறாவும் கொலைகாரனு பேசினாவ”.
“பழியை தூக்கி போட்டிட்டாங்க தாயி. இவன் நம்ம ஊர் காவல் தெய்வம். பூடம் போட்டு சாமி கும்பிடணும். அந்த நேரத்தில இவன் மேலே பொய் கோலை கே சை தூக்கி போட்டுடாவ. அப்போ ஓடிப்போனவன். இன்னைக்கு இங்க வந்து பிணமா கிடக்கான்”.
கம்பை ஊனியபடி அவளும் ராஜத்துரை பார்க்க ஓடினாள். “ஏலே ஊர் காரனுவலே இவனை சும்மா புதைக்க கூடாது. அவனுக்கு வேண்டிய எல்லா சடங்கையும் செஞ்சி, நல்ல பொட்டி வாங்கி, அவனை போடு போடுன்னு போட்டு அடக்கம் பண்ணுங்கலே”. என்றாள் பாட்டி.
செல்லையாவை கூப்பிட்டார்கள்.
“செல்லையா. ராஜத்துரை ஊருல முக்கியமான ஆளு. அதனால ஊர் பொது வீட்டுக்கு அவன் பாடியை தூக்குவோம்”. ஊர் பெரியவர் வந்து சொன்னார்.
“அய்யா. நான் சொன்ன தப்பா நினைக்க மாட்டீயளே. இப்போ இங்க வந்து செத்துபோயிட்டாவளே, ராஜதுரை அய்யா. இவுக வேறே யாரும் இல்லை என் மகளை கட்டுன மருமவன். அவியள என் வீட்டில இருந்தே சடங்கு செஞ்சி அடக்கம் பண்ணுதேன்”. புதுக்குண்டை தூக்கி போட்டார் செல்லையா.
“என்னலே புது உறவு கொண்டாடுத. ஊர் வெளுப்பான் நீ. அவனுக்கு உனக்கும் என்ன உறவு. மாமன் மருமவன் உறவெல்லாம் கொண்டாடுத. அந்த வெள்ளக்காரி நீ பெத்த மவளா?”
“அதை தான் நானும் கேட்கேன். உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு. நல்லா கேட்டுக்காங்க. நேத்தில இருந்து எத்தனை பேருக்கிட்ட இவருக்கு ஒரு வீடு தாங்கன்னு கேட்டேன். எல்லாரும் ஒண்ணும் தெரியாதுன்னு கையை விரிச்சிக்கிட்டு போயிட்டீயளே யாராவது அடைக்கலம் கொடுத்தீயளா?. அந்த மனுசன் இந்த ஊருக்காக பட்ட பாடா யாராவது நினைச்சி பாத்தியளா? போங்கய்யா போங்க. இனிமே எனக்குதான் ராஜத்துரை அய்யா சொந்தம். அந்த வெள்ளக்காரிச்சி என் மவத்தான். எங்கிட்ட சத்தியம் வாங்கி இருக்காரு ராஜத்துரை. நான் அவரை யாருக்கு சொந்த கொண்டாட விட மாட்டேன்”.
அனைவரும அமைதியாக இருந்தார்கள்.
ஊர் தலைவர் வந்தார்.
“சரித்தான் செல்லையா சொல்லுறது சரித்தான். நேத்து அவன் எல்லோரு கிட்டேயும் கேட்கும் போது நம்ம எல்லோரும் புடுங்கிட்டு போயிட்டோம். இப்ப உரிமை கொண்டாடினா எப்படி. அவன் எல்லாருக்கு பொதுப்பிள்ளை. அவன் வீட்டில வைச்சே எல்லா சடங்கும் பண்ணுவோம். ஆனா இதுக்கு என்ன செலவாகுதோ. அதை ஊர் தான் செய்யும். ஏன்னா வெளுப்பான் வீட்டு நல்லது கெட்டதை ஊர் கொடுப்பது தான் வழக்கம். ஆமாம். அது மட்டுமில்லை. அவருக்கு தோரணையா இறுதி ஊர்வலம் நடத்தி. நல்லபடியா கல்லறை கட்டிருவோம். இந்த ஊரை வாழ வச்ச ராஜத்துரை இந்த உலகம் அழியத்தண்டியும் நம்ம மண்ணில கல்லறை மூலமாக வெளியே தெரியணும் ஆமாம்”
ஊர் மக்கள் அமோதித்தார்கள்.
மறுநிமிடம் ராஜத்துரை நல்லடக்கத்துக்கு ஏற்பாடு செய்ய தயாரானார். தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர்மாலை எடுத்து வந்து, நன்றாக குளிப்பாட்டி, தோரணையாக பட்டு வேஷ்டி, சட்டை நேரியல் எல்லாம் போட்டு, தலைபாகை கட்டி மிகச்சிறப்பாக தேர் கட்டி இவரை ஊர்வலம் கொண்டு சென்றனர். அதன் பின் மிகச்சிறப்பாக அவருக்கு கல்லறை கட்டினர். அதில் “பர்மா ராஜத்துரை, எங்கள் ஊர் காவலன்” என பெயர் பொறித்து வைத்தனர்.
ஒரு நீண்ட சரித்திரம் ஒரே நாளில் சரிந்தது. ஆனால் இவர் புகழ் பாடும் விதமாக கல்வெட்டு மட்டும் எப்போதுமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இரண்டு நாள் கழிந்தது. ஊர் மக்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து இவர்களை கவனித்து கொண்டனர். புது புது உறவாக இருந்தது. ஒவ்வொருவரும் ராஜத்துரையை பற்றி பெருமையாக பேசினார். “அவர் உயிரோடு இருக்கும் போது எல்லோரும் வந்து பேசியிருந்தால், அவருக்கு மாரடைப்பு வந்து இருக்காது. ஆனால் இப்போது வந்து சொல்கிறார்களே”. லெட்சுமி மனது நொந்து போய் விட்டார்.
ராஜத்துரை இழப்பு லெட்சுமியை மிகவும் வாட்டி வதைத்தது. இங்கே இருப்பவர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்தாலும் வெள்ளக்காரி போல இருக்கும் லெட்சுமியோடு எல்லோரும் ஒட்ட மறுத்தனர். இது லெட்சுமிக்கு மிகவும் மனது வருத்தமடைய செய்தது. ஏன் இந்த பிறவி எனக்கு. ஏன் இப்படி சிவப்பு தோலோடு பிறந்தேன். இந்த தாய் போல பிறந்து இருக்கலாமே. அடையாளம் தெரியாத என் இங்கிலீஷ் கார தந்தை போல ஏன் பிறந்தேன். அவளின் மனது மிகவும் நொந்து போய் விட்டது.
தன்னை நினைத்தே நொந்துகொண்டாள். இந்த சூழ்நிலை இவளுக்கு மிக மோசமான மனநிலையை ஏற்படுத்தியது. எனவே யாரிடம் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
செல்லையா சொன்னார், “அம்மா இனம் இனத்தோடத்தான் சேரனும். சேர்க்கை மாறிட்டா இப்படித்தான் ஒட்டவே ஒட்டது”.
அமைதியா இருந்தாள் லெட்சுமி. ஆனால் அவளை அறியாமலேயே கண்ணீர் வடிந்தது. சொந்த ஊரில் அனாதை ஆகி விட்டோம். அதற்கு காரணம் இந்த கலப்பு திருமணம். இது தேவையா?.
நடந்து விட்டது. அப்போது யோசிச்சிருக்க வேண்டும். இப்போ கல்யாணம் பண்ணியாச்சு . குழந்தையும் பெத்தாச்சி. இனிமே அனுபவிச்சிதானே தீரணும்.
“எங்கய்யா ராஜத்துரை இந்த ஊரு மேலேயும், இனத்து மேலேயும் அவ்வளவு பாசம் வச்சிருந்தாரு. ஆனா மனிதாபி மானம் கொண்டவரு. அவரு நேரம், இந்த ஊரை விட்டு ஓட வேண்டியதாச்சு. வெளியூரில் போய் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்காரு. ஆனால இப்போ ஊரோட உங்க குடும்பம் ஒட்ட மாட்டேன் கிறது பாருங்க. இதை தான் விதிங்கிறது.
அமைதியா இருந்தாள். “காதலிச்சா தப்பா. அதுவும் ஒரு சாதியை விட்டு இன்னொரு சாதியில கல்யாணம் முடிச்சது தப்பா?”
“பெரிய வியாக்கனம் பேசிறவங்க எல்லாம் காதல் திருமணம் செஞ்சிட்டு, அதுக்கப்புறம் தன் குடும்பத்தோட ஒரு கோயில் கொடைக்கு போக முடியாது. திருமண வீட்டுக்கு போக முடியாது. பொது இடத்துக்கு கணவன் மனைவியா போக முடியாது . இதுதான் நம்ம ஊரோட நிலமை. எத்தனை நூற்றாண்டு மாறினாலும் இங்க மாறவே மாறது”.
அவள் மனது மிகவும் கஷ்டப்பட்டது. பர்மாவில் இருக்கும் வரை இவர்கள் தமிழர்கள் அவ்வளவுத்தான். இவர்கள் என்ன சாதி, எங்கிருந்து வந்தார்கள். எப்படி வந்தார்கள் யாரும் கேட்கவில்லை. மேலும் ஒரு படி மேலே போய் இவர்கள் இந்தியர்கள் என போற்றப்பட்டார்கள். ஆனால் இன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் வந்து நின்று சாதி என்ற ஒரு அடைமொழிக்குள் அடைக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தாள்.
வெள்ளத்துரைக்கும் அதே நிலைத்தான். திருமணம் முடியகூடிய வயதாகி விட்டது. திரண்ட தோளுக்கு சொந்தகாரன். அவனை அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்கு சேர்த்து விட்டிருந்தார் செல்லையா. அங்கு கணக்கு பிள்ளை வேலை. அங்கே இவனது உறவுக்காரர்கள் நிறைய பேர் வேலை பார்த்தார்கள். அவர்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது.
இவனும் ஆர்வத்துடன் வேலை பார்க்க ஆரம்பித்தான். புது உறவுகளை பார்க்கும் சந்தோசம் அவனுக்கு மேலும் உற்சாகத்தினை தந்தது.
காலங்கள் ஓட ஆரம்பித்தது. சுமார் 6 மாதம் கழிந்து இருக்கும். ஒரு நாள் தனது தாயை கூட்டிக்கொண்டு திருச்செந்தூர் போய் கடலில் குளித்து விட்டு வந்தான். உடன் செல்லையாவும் சென்றிருந்தார்.
செல்லையா ஊரில் துணி துவைக்கும் வேலை செய்யும் நேரத்தினை தவிர மற்ற நேரம் மனைவியை கவனிப்பது, அதன் பிறகு வெள்ளத்துரையையும் அவனது தாயையும் பராமரித்து வந்தார்.
ஒவ்வொரு வேளையிலும் உற்ற தகப்பனாக இருந்து லெட்சுமிக்கு அறிவுரை கூறிக்கொண்டிருதான்.
ஒரு நாள் லெட்சுமி சொன்னாள். “அப்பா, என் பையனுக்கு இந்த ஊரில் நலலதொரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிட்டா சந்தோசமா இந்த ஊரில ஒரு மண்ணு மனையை வாங்கி இருந்துகிடலாம்”.
ஆமாம்மா. நீங்க பார்மாவில எப்படி இருந்தியளோ, எனக்கு தெரியலை. பர்மாவில ஒருவேளை பெரிய அளவில இருந்திருக்கலாம். ஆனா சொந்த ஊரு எப்பவும் சுகம் தான். காலையில ஆத்தில குளிக்கிறது. அப்புறம் கிடைச்ச வேலையை பாத்துட்டு , கிடைச்சதை சாப்பிட்டு சந்தோச மாக வாழலாம். அதனால இங்க நமக்கு தக்க ஒரு பெண்ணு கிடைச்சா சந்தோசம் தான்.
செல்லையா சிரித்தான்.
“ஆனா நம்ம பிள்ளைக்கு இந்த ஊரு காரவியங்க பொண்ணு கட்டி தரணுமுல்லா”.
“ஏன் தர மாட்டாவுலா”.
“ம். அதுதான் யோசனையா இருக்கு. ஏற்கனவே பல தொறநாட்டியம் பேசுவாவ. நீங்க வேறே இனத்தில இருந்து கல்யாணம் முடிச்சி வந்திருக்கிய. உங்க பிள்ளைக்கு இவங்க பொண்ணை தருவாவளா?. இங்க வேறே என் வீட்டில இருக்கீய. வெளுப்பான வீட்டில இருக்கவியளுக்கு எங்க பொண்ணு கட்டி தரப்போறாவ”.
யோசித்தான் செல்லையா.
உண்மைத்தான். சாதி கிராமத்தில் தலைவிரித்து ஆடுது. நம்ம சாதி காரனா இருந்தாலும் அடுத்த சாதியில பொண்ணு கட்டிட்டா, அவன் எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. இங்க ராஜத்துரை குடும்பம் நொறுங்கி போய் வந்திருக்கு. இவுகளுக்கு பெண் கட்டி கொடுப்பாவளா?
அதனால் தான் செல்லையா யோசிக்கிறார்.
ஆனால் வெள்ளத்துரை நம்பிக்கையோடு இருந்தான். நம்ம தந்தை இந்த ஊருக்கு செய்த நல்ல செயலுக்கு நிச்சயம் பெண் தருவாங்க .
ஆனால் உண்மையிலேயே நடந்ததா?
மறுநாள் செங்கல் சூளைக்குவேலைக்கு சென்றான்.
அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் மிகவும் சந்தோசமாக வேலை செய்தார்கள். ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்று சொல்வார்களே. அதுபோல ஆடிப்பாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த வேளையில் தான் அந்த ஊரை சேர்ந்த பெண் தேனிலா. அவளை பார்த்தான். அவள் தேன் நிலா தான். தேவை போல் இருந்தால், நிலவு என்றாலே குளிச்சி. தேன் என்றால் இனிப்பு. இரண்டும் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் . அதனால் தான் அவளுக்கு அவள் பெற்றோர் அந்த பெயரை வைத்து இருந்தார்கள்.
அவள் செங்கல் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்தாள். அவளும் அவளது தாயும் தான் செங்கல் தூக்கும் தொழில் செய்து வந்தனர்.
கிட்டத்தட்ட 20 அடுக்கு செங்கலை மிகவும் அசால்டாக தலை மீது தனியாளாக நின்று, தலைமீது தூக்கி அடுக்குவாள். சிரித்த முகத்துக்கு சொந்த காரி. ஒவ்வொரு நடைக்கும் டோக்கன் கணக்குபிள்ளை தான் கொடுக்க வேண்டும். சிரித்துக் கொண்டே இவனிடம் டோக்கன் வாங்குவாள். அந்த தலைச்சுமையை வைத்துக்கொண்டே குனிந்து இவனிடம் டோக்கன் வாங்கினாள்.
“ஆகா. ஒரு பெண். எப்படி வேலை செய்கிறாள்”. வெள்ளத்துரைக்கு தேனிலா மீது பிடித்தம் ஏற்பட்டது.
“ஊர் சொந்தம் இவள் மூலமாக உறவு ஆகி விடும்” என்றே நினைத்தான் வெள்ளத்துரை. எனவே அவள் மீது மோகம் கொண்டான்.
ஒரு நாள் செல்லையாவிடம் கேட்டான் “தாத்தா எனக்கு தேனிலாவை திருமணம் முடிச்சி தருவாளா?”
சிரித்தார் செல்லையா. “அய்யா அவங்க தந்தா நல்லது தான். எதுக்கும் நான் நேரங்காலம் பாத்து கேட்கேன்”. என்றார்.
ஒரு நாள் தேனிலாவின் தந்தையை பார்த்து கேட்டும் விட்டார். அவளுடைய அப்பா, “ஏடேய் செல்லையா, நல்லா இருக்குடே நியாயம். என் சாதி சனமா இருந்தா பராவாயில்லை. ராஜத்துரை வெள்ளக்காரிச்சியை போய் கட்டிட்டு வந்திருக்காரு. இவரு மவன் கரிக்கட்டை மாரி இருக்கான். கிளியை பிடிச்சு பூனை கையில கொடுக்க சொல்லுதீயோ”. என்றார்.
செல்லையா அமைதியாக நின்றார். “இங்கே பாருடே செல்லையா. என்ன இருந்தாலும் நம்ம சாதி சனம் தான் முக்கியம். ராஜத்துரை நல்லவியத்தான். ஆனா வெள்ளத்துரை கலப்படமால்லா வந்து நிக்கான். வேண்டாமுடே. வேண்டாம்”. என திட்ட வட்டமாக சொல்லிவிட்டான்.
மறுநாள் “யய்யா வெள்ளத்துரை, நாம பஜார் வரைக்கு போயிட்டு வருவோம்” என சைக்கிளை எடுத்தான். சைக்கிளை செல்லத்துரை அழுத்த, பின்னால் வெள்ளத்துரையை ஏத்திக்கொண்டார்.
“என்ன தாத்தா தேனிலா வீட்டில சரின்னு சொன்னவுளா?”
சிரித்தார் செல்லத்துரை. “அது எப்படி சரின்னு சொல்லுவவா. இங்க சாதி என்னமா கோரத்தாண்டவம் ஆடுது. உனக்கு அது எங்க புரியுது.
வெள்ளத்துரைக்கு புரிந்தது. “என் சொந்தம். என் சாதி,. என் இனம் . எவ்வளவு சந்தோசமாக இருக்கும். என் அப்பா பார்த்த பார்வை. சாதி விட்டு சாதி கல்யாணம் செய்ய போய் நான் அந்தரத்தில நிக்கேன்”.
தேனிலா நமக்கு இல்லை என முடிவாகி விட்டது. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அப்பாவை வெறுத்தான். தன் வாழ்க்கையில் முதலில் வந்த காதல் காணல் நீராக மாறி விட்டது. என் அப்பா செய்த தவறுக்கு நான் என்ன செய்வேன். என்னை என் சாதியில் சேர்க்க மாட்டார்களா?.
அமைதியாக வந்தார்கள்.
“யய்யா கவலை படாத இன்னைக்கு ராத்திரி ஷோ சினிமாக்கு போவும் வா?”. பதில் எதுவும் சொல்லவில்லை.
மனது போன போக்கில் அவர் பின்னால் நடந்தான். ஒரு பாய் கடையில் புரோட்டா சால்னா சாப்பிட்டார்கள். அது ருசிக்கவில்லை. சிறிது நேரத்தில் டூரிங் டாக்கீஸ் இல் இருந்து “மருதமலை மாமணியிலே முருகையா”. எல்லோரும் பரபரப்பாக படம் பார்க்க ஓடினார்கள். வெள்ளத்துரை செல்லையாவோடு வெறுப்பாக தியேட்டர் உள்ளே சென்றான். அங்கே திரைப்படம் ஓட ஆரம்பித்தது.
எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம். அதில் பைத்தியமாகி இருப்பார் சிவாஜி கணேசன். அதுவும் காதல் தோல்வி பைத்தியம். அந்த படத்தினை பார்க்கும் போதே மேலும் வெள்ளத்துரைக்கு மனது கஷ்டமாக இருந்தது.
“ஓரே பாடல் உன்னை அழைக்கும்” என்பது போலவே தேனிலா கண்ணீர் மல்க நின்று மாடியில் இருந்து குதித்து, இவனை வெறுமையாக்கினாள். கண்ணை நன்றாக தடவிப்பார்த்தான். அது திரைப்படம் . உண்மையல்ல. படம் முடிந்தது. சைக்கிளில் இருவரும் கிளம்பினார்கள்.
பேசிக்கொண்டே இருவரும் உருக்கு கிளம்பினர்.
“தாத்தா என் அப்பா பண்ணியது தான் தப்பு. இவ்வளவு இன பந்து இருக்கும் போது, என் அம்மாவை வேறு சாதியில் கட்டியிருக்க கூடாது”. மனவெறுமையுடன் கேட்டான்.
சிரித்தார் செல்லையா-. “வெள்ளத்துரை உன் அப்பன் பெரிய தியாகிய்யா. அவன் வேணுமுன்னு செய்யலை. அவனுக்கு ஊரு ஜனங்க மேலேதான் பாசம் பற்று எல்லாம் இருந்துச்சு. அவன் இளவட்டமா இருக்கும் போது, அவனுக்கு பெண் தர நான் நீன்னு நம்ம ஊருல சில குடும்பம் இருந்துச்சு. ஆனா விதி வேற மாதிரி வேலை செஞ்சிட்டு. பெரும் மூச்சி விட்டார்.
“அவன் இந்த நிலைமைக்கு போக காரணம் இந்த ஊருல இருந்த சிவராமன் அய்யர். அவருதான் உங்கப்பன் இந்த ஊரில் இருந்தால் இந்த ஊர் முன்னேறிருமுன்னு, பொய் வழக்குபோட்டு, அவரை கொலை செஞ்சிட்டு அந்த கேஸை உங்க அப்பா மேலே போட்டுட்டு போயிட்டாரு. அதனால தான் உன் அப்பா இப்படி ஊரை விட்டு ஓட வேண்டியதாயிட்டு. இன பெந்துகளை இழக்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுட்டு.”
வெள்ளத்துரை கண்கள் சிவந்தது. “பர்மாக்கு ஓடி போக போய்த்தான் அங்க நம்ம அம்மாவை பார்த்தாரு. அம்மாவுக்கு வாழ்க்கை கொடுக்கணுமுன்னுத்தான் அவங்களை கட்டினாரு. அந்த கதையெல்லாம் அடிக்கடி அம்மா சொல்லி கேட்டுருக்கான். ஆனாலும் இந்த அழகான, சொந்த காரங்க நிறைஞ்ச ஊரை விட்டுட்டு ஓட காரணம் சிவராமன் அய்யரா?”. இப்போது கோபம் சிவராம அய்யர் மேலே திரும்பியது.
“தாத்தா அந்த அய்யர் இப்போ இருக்காரா?”.
“இருக்காரு பக்கத்தில இருக்கிற அக்ரகாரத்தில் தான் இருக்காரு. இப்போ அவருக்கு கண் சரிவர தெரியாதுன்னு கேள்வி”.
ஆனால் அது எல்லாம் அவன் நினைவில் ஏறவில்லை.
“அப்போ என் குடும்பம் இப்படி நடுத்தெருவுக்கு வர காரணம் அந்த அய்யர்தான்”.
“ஆமாய்யா. அது மட்டுமில்லை. ஒரு காலத்தில அந்த அக்கரகாரத்து தெருவில நாம நடக்க முடியாது. அப்படியே போனாலும் மேல சட்டை போடக்கூடாது. காலில செருப்பு போடக்கூடாது. அந்த அளவுக்கு நம்மல மோசமா நடத்துவாவ. ஆனா இன்னைக்கு அந்த அக்ரகாரத்தில இவுக குடும்பம் மட்டும்தான் தன்னந்தனியா இருக்கு. மத்தவிய எல்லாரும், தங்களோட வயல்களை போட்டுட்டு பட்டணத்துக்கு ஓடிப்போயிட்டாவ. அவுக வயல்களை காவல் காத்தவிய இப்போ வச்சிருக்காவ. வீடுகளை அப்படியே போட்டுட்டு போனாதால. கிராமத்தில உள்ள அய்யமாரு வீடும் அழிஞ்சி போய் கிடக்கு. இவரு இருக்கிற வீடு மட்டும்தான் இருக்கு. அங்க இவரு குடும்பம் இப்பவும் இருக்கு”
அமைதியாக வந்தான். “அந்த அய்யர்தான் கொலை செஞ்சாருன்னு ஊருக்கே தெரியுதே தாத்தா. ஆனா அய்யரை பிடிச்சு போலிசுல கொடுத்துட்டு, எங்க அப்பா மேலே இருந்த பலியை தொடைச்சிருக்கலாமே”.
“ம். முடியாது. அய்யர் ரொம்ப அறிவோட எல்லா வேலையும் செஞ்சிட்டாரு”.
“அதுக்காக கொலை காரன் ரோட்டில லாந்துவான். நல்லவங்க இப்படி நாய் மாரி அலையுனுமா?”
“ம். கடவுள் இருக்காரு வெள்ளத்துரை. அய்யர் உங்க அப்பாவுக்கு செஞ்ச துரோகம் இப்போ அனுபவிச்சிக்கிட்டு இருக்காரு. அரசன் அன்று கொல்வான். கடவுள் நின்றுகொல்லுவான்”.
“இல்ல. அய்யரை ஒருத்தரும் கொல்லலை”
இல்லை. கொன்னா கூட நிம்மதியா போய் இருப்பாரு. ஆனா மனுசன் இப்போ படாத பாடு படுறாருன்னு கேள்வி. கிராமத்தில அவர் குடும்பத்தோடு இருக்கிறாரு. ஆன ஊர் நெறைய அவருக்கு வயல் இருந்தும் கூட, யாரும் சாப்பாட்டுக்கு கூட நெல் கொடுக்கலைன்னு கேள்வி பட்டேன்.அதனால அவரு குடும்பத்தோட பட்டினி கிடக்காருன்னு கேள்விப்பட்டேன்”.
வெள்ளத்துரை அமைதியாக இருந்தான். சைக்கிளை அழுத்திக்கொண்டே பேசினார் செல்லையா.
“இங்க பாரு வெள்ளத்துரை உப்பத்தின்னவன் தண்ணீ குடிப்பான். தப்பு செஞ்சவன் தண்டனை பெறுவான். உங்க அப்பா எந்த காலத்திலும் யார் கிட்டேயும் தலை குனியவே இல்லை. வாழ்ந்த இடத்தில ராஜாவத்தான் வாழ்ந்தாவ. எல்லோருக்கும் வாழ்க்கையில பிரச்சனை வரும். உங்களையும் ஊருல கொண்டு பாதுகாப்பா விட்டுட்டு போலிசுல மாட்டாம, ஜெயில் தண்டனை அனுபவிக்காம போய் சேர்ந்துட்டாவ. ஆனால அய்யர் உயிரோட இருந்து நரவேதனை படுறாரு”.
மிகவும் அமைதியானான். ஆனால் அவன் மனதுக்குள் திட்டமிட்டான். “என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விரட்டினது அந்த விளங்காத அய்யர் தான். அவரை சும்மா விடக்கூடாது. அவரை பலிவாங்கனும்.” என முடிவு செய்தான் வெள்ளத்துரை.
எனவே அந்த இருட்டுக்குள் செல்லும் சைக்கிள் பின்னால் இருந்த வெள்ளத்துரை முகமும் இருண்டு கொண்டே இருந்தது.
இது வரை கதை சொன்ன அகஸ்தீஸ்வரன் சாருக்கு கொட்டாவி வந்தது. ஆஸ்பத்திரியில் தமது முன்னோர்கள் பற்றி சொன்ன கதையை கேட்டுக்கொண்டிருந்த சந்திரனிடம் சொன்னார்.
“அந்த வெள்ளத்துரையோட மகன் தான் சந்திரா நீ”.
அகஸ்தீஸ்வரன் சார் சந்திரனின் மூன்று தலைமுறை வரலாற்றில் தாத்தா வரலாற்றை சொல்லி முடித்து விட்டு, அப்பா வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார்.
“ம். என் சாதியை விட்டு விட்டு என் தாத்தா ராஜத்துரை வேறே பெண்ணை கட்டிக்கிட்டாரு. எங்கப்பா தேனிலாவை கட்டினாரா?”
ஆர்வத்துடன் கேட்டான். அதே நேரம் அவன் மனது தவித்தது. “நம்ம அம்மா பேரு தேனிலா இல்லையே. அப்படின்னா, இவர் யாரை கட்டினார். இவர் சாதிக்குள்ள கட்டினாரா? இல்லை இவரும் சாதி மாறி போயிட்டாரா?. என் அம்மாவுக்கு என் சாதிக்காரங்க கலர் மாரி இல்லையே. செவசெவன்னுல்லா இருந்தாவ. அப்படின்னா?” நினைக்கும் போதே சந்திரன் மனதுக்குள் இவனுக்கு பல பிரச்சனை வந்து போனது.
தான் முத்துகிளியை விட்டு மிக தூரமாக செல்வது போலவே இருந்தது.
அகஸ்தீஸ்வரன் சந்திரனை பார்த்தார். “சார்வாள் எங்க அப்பா யாரை கட்டினாரு?”
“சொல்றேன். அமைதியா இரு. சொல்றேன். இப்போ எனக்கு தூக்கம் வரும் . கொஞ்சம் அமைதியா இரு. காலை யில சொல்றேன்” என்றார்.
அதன் பின் கொட்டாவி விட்டப்படி அப்படியே தூங்க ஆரம்பித்து விட்டார்.
சந்திரனுக்கு தூக்கம் வரவில்லை. “தாத்தா ராஜத்துரை வேறு சாதி பெண்ணை கட்டிவிட்டார். அதையே ஊரில் ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளூர் தேனிலாவையும் அப்பா கட்டிய படி தெரியவில்லை. அப்படியென்றால் யாரை கட்டினார். என்ன ஆச்சி. அய்யோ எனக்கு தலையே சுத்திர மாதிரி தெரியுதே”. என அந்த அரசு ஆஸ்பத்திரியின் 7 வது மாடியில் இருந்து நகரத்தினை பார்த்தான். தீடிரென்று மின்சாரம் தடை ஏற்பட்டது.
அந்த நகரமே இருண்டது. நகரம் மட்டுமா? நமது வாழ்க்கையும் அல்லவா இருண்டு போனது. துடித்தே போய் விட்டான் சந்திரன்.
*********
காலை விடிந்தது.
அகஸ்தீஸ்வரன் சார் கிளம்பினார்.
“அய்யா எங்க அப்பா வரலாறு”.
“இரண்டு தலைமுறை வரலாறுடா. உடனே சொல்ல முடியுமா?”
“அய்யா?”
“நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வருவேன். உன் கிட்டே சொல்லுவேன்”.
மாடியை விட்டு இருவரும் கீழே இறங்கினார்கள். டீ வாங்கி கொடுத்தான். குடித்துவிட்டு அவர் கிளம்பினார்.
ரத்னம் அய்யாவுக்கு டீ வாங்கி கொண்டு மாடியில் ஏறி ஒடியே வந்தான். அவரை எழுப்பி டீயை கொடுத்தான்.
குடித்தார். அதன் பின் எழுந்து கழிவறைக்கு சென்றார். இவன் அருகில் இருந்து உதவி புரிந்தான்.
நர்ஸ் கூப்பிட்டார்.
“தம்பி இன்னைக்கு பெரியவருக்கு டிஸ்சார்ஜ். வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்”.
“சரிம்மா” சந்திரன் சொல்லிவிட்டுத்தான் நினைத்தான். “அய்யோ சார் கிட்டே சொல்லணுமே. இன்னைக்கு ராத்திரி கதை சொல்ல அவர் இங்கே வந்திரக்கூடாதே” என நினைத்தான்.
வேகமாக ஓடிப்போய் சன்னல் வழியாக பார்த்தான். அவர் அங்கு வந்த டவுண் பஸ்ஸில் ஏறி விட்டார். போனை எடுத்து அடித்து பார்த்தான். அது சுவிட்ச் ஆப் என வந்து இருந்தது.
என்ன செய்ய என நினைக்கும் போதே பஸ் கிளம்பி இவன் கண் பார்வையை விட்டு மறைந்தது. ரத்னம் கழிவறையை விட்டு வெளியே வந்து விட்டார்.
அவரை பெட்டில் கொண்டு படுக்க வைத்தான்.
“அய்யா இன்னைக்கு உங்களை வீட்டுக்கு போகலாமுன்னு சொல்லிட்டாங்க”.
“சந்தோசமுய்யா. நீ என்னை கொண்டு போய் வீட்டில விட்டுட்டு மும்பை போய்யா. ரொம்ப நாளா எங்களுக்கு சேவகம் செஞ்சிட்டே”. என்றார்.
சந்திரனுக்கு நெஞ்சு வலித்தது. கழற்றி விடப்பார்க்கிறார்.
நர்ஸ் மீண்டும் கூப்பிட்டார், “உடனே போய் ரத்தம் டெஸ்ட், ஈ.சி.சி. எக்கோ எல்லாம் எடுக்கணும். அவரை கூட்டிட்டு போய் எல்லாம் எடுக்க ஏற்பாடு செய்யுங்க”. என நோட்டை கொண்டு கொடுத்தார்.
“அம்மா, அய்யாவுக்கு டிபன் சாப்பிடலாமா?”
“ம். உனவுக்கு முன்னால சுகர் ஊசி போடுங்க. அப்புறம் சாப்பாடு கொடுங்க. அதுக்கு பொறவு காலை மாத்திரை கொடுங்க. தொடர்ந்து டெஸ்ட் எடுக்க ஏற்பாடு செய்யுங்க”.
“சரிம்மா”
ரத்னத்தினை அருகில் உள்ள அறைக்கு கூட்டிச்சென்றான். அங்கே ரத்தம் டெஸ்ட் எடுததார்கள். ரிசல்ட் சுகர் நார்மல் என்று வந்தது. பிரசர் பார்த்தார்கள். பிரசர் இல்லை. தொடர்ந்து சுகர் ஊசி போட்டார்கள். அதன் பின் பெட்டுக்கு கூட்டிச்சென்று படுக்க வைத்தான். அதன் பின் டிபன் வாங்க மாடியை விட்டு கீழே இறங்கி ஓடினான்.
10 நிமிடத்தில் மேலே வந்தான். டிபனை கொடுத்தான். தொடர்ந்து மாத்திரையை கொடுத்தான். சந்திரன் மேலும் சுறுசுறுப்பாக இருந்தான்.
இ.ஜி.ஜி எடுக்கும் அறையில் போய் டோக்கன் வாங்கினான். தொடர்ந்து எக்கோ எடுக்கும் இடத்தில் நீண்ட வரிசை நின்றது. அந்த இடத்தில் எப்படி அய்யாவுக்கு எக்கோ எடுத்து பார்க்க என தெரியாமல் விழித்துக்கொண்டான்.
ஆனாலும் முதலில் அவரை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போய் டி.ஜி.ஜி எடுத்தான் . அது நார்மலாக இருந்தது.
தொடர்ந்து படுக்க வைத்து விட்டு, டாக்டர் வரட்டும் எக்கோ எடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் நல்லதொரு வைப்ரேசன் வாசலில் வந்தது. ஆம் முத்துகிளி சாப்பாடு கொண்டு வந்தாள். பின்னாலே வாசு தாத்தா ஒட்டுவா ரொட்டி போல தொத்திக் கொண்டு வந்தார்.
“என்னடே”. என்றார். அவர் முழியே வேறுமாதிரியாக இருந்தது.
“ஒண்ணுமில்லை தாத்தா, இன்னைக்கு அய்யாவுக்கு டிசார்ஸ்”.
“ஓ”.
“அதான் காலையில எல்லா வேலையும் செஞ்சி வச்சிட்டேன்”.
“சரி. மும்பை போனுமுலா? எதுவும் சவாரி கிடைச்சுதா?. இல்லாட்டி மும்பை போவ அய்யாவை பெட்ரோல் போச்சொல்லட்டா?”
யாரோ சவுக்கால் அடிப்பது போலவே இருந்தது. தன்னை விரட்ட குறியாக இருக்கிறார்கள். எப்படியாவது முத்துகிளியை விட்டு பிரிக்க துடியாய் துடிக்கிறார்.
மிகவும் மனது வலித்தது. நன்றி கெட்ட உலகமுடா இது.
முத்துகிளியை பார்த்தான்.
அவன் இவளை பார்க்க வில்லை. இருந்தாலும் பேசினான்.
“காலையில மாத்திரை கொடுத்துட்டேன். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டேன். எல்லா டெஸ்டும் எடுத்துட்டேன் நார்மலுன்னு வந்துட்டு. ஒரே ஒரு டெஸ்ட் எக்கோ மட்டும் எடுக்கணும். எடுத்துட்டு நாம டாக்டர் கிட்ட சொல்லிட்டு ஊருக்கு அய்யாவை கூட்டிட்டு போயிடலாம்”.
“ம்”. என தலையை அசைத்தாள்.
நர்ஸ் வந்தார்.
“இந்தாங்க மாத்திரை சீட்டு. இதையும் நோட்டையும் கொண்டு போய் கவுண்டருல நின்று வாங்கிக்காங்க. இரண்டு மாசத்துக்கு எழுதியிருக்கு”. என்றார்.
நோட்டை எடுத்தான். “அய்யா நான் மாத்திரை வாங்கிட்டு வாரேன்” கிளம்பினான்.
ரத்தினம். முத்துகிளியை பார்த்தார், “முத்துகிளி தம்பி கூட போய் மாத்திரை வாங்கிட்டு வா”. என்றார்.
முத்துகிளி எழுந்தாள். சந்திரன் பின்னால் கிளம்ப ஆயத்தமானாள்.
வாசு தடுத்தார். “ரத்னம் பொட்டை பிள்ளை அங்க எதுக்கு. கூட்டம் அதிகமா இருக்கும். தம்பி போறமுல்லா. வரிசையில நின்னு வாங்கிட்டு வரட்டும். முத்துகிளி இங்கன இருக்கட்டும்” என்றார்.
இலேசமாக சந்தனமழை பொழிந்த இடத்தில் வாசு தாத்தா பட்டாசு மழை பொழிந்து விட்டார். உடல் எல்லாம் நெருப்பாய் கொதித்தது.
“சே. பாவி மனுசன்” என மனதுக்குள் திட்டிக் கொண்டே கிளம்பினான். லிப்டை பார்த்தான். கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழாவது மாடி. பராவாயில்லை. வயதானவர்களும் , நோயாளிகளும் நடக்கட்டும். நாம மாடிப்படி வழியே கீழே கிளம்புவோம் என நடையை கட்டினான்.
வேக வேகமாக நடந்து கீழே வந்தான். ஆனால் மனதில் உள்ள சோர்வு உடலில் காட்டியது. கீழே வந்த பின் லிப்டை பார்த்தான். அங்கே லிப்ட் அருகில் முத்துகிளி நின்று கொண்டிருந்தாள்.
சந்தோச சிறகடித்து பறந்தான் சந்திரன்.
“ஆகா. முத்துகிளி வாசு தாத்தாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வந்து விட்டாள். அப்படியென்றால் அவள் என்னை காதலிக்கிறாள்”.
அவன் மீது பன்னீர் மழையும், ரோஜா புஷ்பமும் ஒன்று போல சொரிந்தது.
சந்தோசத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.
( தொடர்ந்து முத்துகிளி கூவுவாள்)


