செய்துங்கநல்லூர் கிராமசபை கூட்டம் செய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். பார்வையாளராக முருகன் கலந்துகொண்டார். கூட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, செய்துங்கநல்லூர் மிகவும் முக்கிய பங்கு வகித்தது. இங்கிருந்து தான் ஸ்ரீவைகுண்டம், ஏரல்போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டது. இதற்காக மூன்று குழுக்களாக பிரிந்து மக்கள் உதவி புரிந்தனர். செய்துங்கநல்லூரில் இருந்து தான், தாமிரபரணி கரையில் உள்ள ஊர் மக்களை காப்பாற்ற படகு அனுப்ப பட்டது. இந்த பணியில் செய்துங்கநல்லூர் மக்கள் தீவிரமாக பணிபுரிந்தனர். செய்துங்கநல்லூர் மக்கள் பொருள்களை பிரித்து பார்சல் போட்டு, மக்களுக்கு அனுப்ப இரவு பகலாக பாடுபட்டனர். இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 800 பேருக்கு உணவளித்த ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி மக்களுக்காக பாலக்காடு எக்ஸ்பிரஸை ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்திய ரயில்வே நிர்வாகம், வெள்ள நிவாரத்திற்காக பெரிதும் பாடுப்பட்ட செய்துங்கநல்லூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் விவசாயசங்க தலைவர் குமார், தலையாரி சோமசுந்தரம், சுகாதர ஆய்வாளர் பால கண்ணன், நியாய விலைக்கடை பாலகிருஷ்ணன், அங்கன் வாடி பானு, பேட்ரிக்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


