தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது இந்தாண்டு 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சுய முடிவுடன் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலப்போட்டி நடத்தப்பட்டது
தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ரங்கோலி கோலப் போட்டியில் மாநகராட்சி ஒப்பந்த பெண் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல விதமான வண்ணங்களில் வாக்களிப்பதின் அவசியம் மற்றும் எவ்வித அச்சமின்றி வாக்களிப்பது ,வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை மற்றும் உரிமை எனது வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பல வண்ணங்களிலான கோலங்களை வரைந்து அசத்தினர்.
இந்த விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு போட்டியில் கலந்து கொண்டு கோலங்களை வரைந்த பெண் ஊழியர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் சுமதி,சுகாதார அலுவலர் ஸ்டாலின், கண்ணன், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


