தூத்துக்குடி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகள், உடமைகள், உடைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் குளங்கள், ஆறு மற்றும் வாய்க்கால் கரைகள் உடைந்து சேதமடைந்தது.
இந்த நிலையில் மழை வெள்ளம் பாதித்த இடங்களை மத்திய குழுவினர் கடந்த மாதம் நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால் மழை வெள்ள நீர் ஏராளமான இடங்களில் தேங்கியிருந்த காரணத்தினால் முழுமையாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் கே.பி.சிங் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுக்கள் தூத்துக்குடி மாநகரம் மற்றும் திருச்செந்தூர் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். மற்றொரு குழுவினர் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.
அதன்படி தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட முறப்பநாட்டில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்டங்களை பார்வையிட்டனர். அந்த பகுதியில் இருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர் உட்பட அந்தப் பகுதியில் உள்ள 637 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டம் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வயல்வெளிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் மழை வெள்ள நீர் புகுந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பார்வையிட்டு மருத்துவர்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து பொன்னன் குறிச்சி பகுதியில் மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகள் மற்றும் மின்வாரிய அலுவலகத்தினை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் வந்திருந்தனர்.


