மம்தா பானர்ஜி (5 சனவரி 1955) மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் நிறுவனத்தலைவரும் ஆவார்.இவர் தீதி என்று மக்களால் விளிக்கப்படுகிறார்.
மம்தா சனவரி 5, 1955 ஆம் ஆண்டு கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள பசந்தி தேவி கல்லூரியில் பட்டம் பெற்று ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
அவர் தமது அரசியல் வாழ்வை காங்கிரசு(இ) கட்சியில் 1970களில் துவங்கினார். உள்ளூர் காங்கிரசில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளராக விளங்கினார். 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் மார்க்சிய அரசியல்வாதியான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வென்று இந்தியாவின் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்ற பெருமை பெற்றார். அனைத்திந்திய இளைஞர் காங்கிரசு தலைவராகவும் பதவி வகித்தார். 1989ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோற்ற மம்தா அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே 1991ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1996, 1998, 1999, 2004, 2009 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து வென்று கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர பிரதிநிதியாக உள்ளார்.


