நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளுக்காக 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், 21-ந் தேதி தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, நிவாரண உதவி தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்கு தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. இதில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு: நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டித்தருவதும் அரசின் தலையாய கடமை என்பதை கருத்தில் கொண்டு வீடுகள் பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்குவது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படும். மேலும் எந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் இம்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது. இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்து தரும் பணி மாநில வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும். இதற்கென வெளிமாவட்டங்களில் இருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும்.
சென்னை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய அவசர தேவையைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும் அதன் அடிப்படையில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் கடன் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த கடன் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்” என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ், மேற்கூறிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை, ஆண்டுக்கு 6 சதவீத சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3,300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும்.
சென்னை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களின் கடன் திருப்பம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களுடைய நிலையைக் கருத்தில் கொண்டு புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கடன் பெற்றுள்ள சுயஉதவி குழுக்கள் நிவாரண கடன் தவணை மற்றும் வட்டியை திருப்பி செலுத்தவதற்கும் அவர்கள் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பும் செய்து தரப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழு கூட்டத்தில் இதனை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத்தகுதி வாய்ந்த மகளிர் 4 ஆயிரம் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் அவர்களுக்கு புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு
பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்துவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


