ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள தருவைகுளம் மீனவர்கள் உடனடியாக கரை ஒதுங்க வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், தருவைகுளம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இருந்து பெறப்பட்ட அறிவிப்பில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றம் அதனை ஒட்டி உள்ள மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (திங்கட்கிழமை) தென்கிழக்கு அரபிக்கடலின் மத்திய பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆகையால் தருவைகுளத்தை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடித்தலில் மேற்குறிப்பிட்ட பகுதியில் ஈடுபட்டு இருக்கும் விசைப்படகுகள், அருகில் உள்ள துறைமுகத்தில் கரை ஒதுங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து மீனவர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


