நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் பெறும் பகுதி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாக்களில் முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தாறு ஆகிய தாலுகாக்களில் 2,44,717 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி மற்றும் அம்பை தாலுகா அனைத்து பகுதிகளிலும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. திசையன்விளை தாலுகாவில் திசையன்விளை, அப்புவிளை, உறுமன்குளம், கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி மற்றும் குட்டம் ஆகிய வருவாய் கிராமங்களில் மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 652 குடும்ப அட்டைகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
பிற பகுதிகளான மானூர், நாங்குநேரி தாலுகா மற்றும் ராதாபுரம், திசையன்விளை தாலுகாகவில் பிற கிராமங்களில் உள்ள 1,63,705 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
தென்காசி, கன்னியாகுமரி
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, திருவேங்கடம் மற்றும் வீரகேரளம்புதூர் ஆகிய 8 தாலுகா முழுவதும் மொத்தமுள்ள 4,74,939 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், திருவட்டார், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா முழுவதும் 5,77,803 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
ரூ.541 கோடி ஒதுக்கீடு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்க ரூ.398 கோடியும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 14 லட்சத்து 31 ஆயிரத்து 164 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்குவதற்கு ரூ.143 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.541 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.6 ஆயிரம் பெறும் குடும்பத்துக்கு 5 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு செயலாளர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.


