பழங்கற்கால உலக வரைபடத்தில் சென்னையும், இந்தியத் துணைக் கண்டமும் சேரக் காரணமாக அமைந்தவர் இராபர்ட் புரூஸ் பூட் (Robert Bruce Foote – 1834-1912)) என்பவர். இங்கிலாந்தில் பிறந்து நிலவியல், தொல்லியல் வல்லுனராக விளங்கியவர்.
இந்தியாவில் தொல்லியல் ஆய்வு நிறுவனம் 1861 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 1851ஆம் ஆண்டில் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. உலகில் மனித இனத் தோற்றம் குறித்த ஆய்வுகள் 1860 ஆம் ஆண்டுகளில் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில், புவியியல் ஆய்வு மையப் பணிக்காகச் சென்னை வந்தார் இராபர்ட் புரூஸ்.
நிலவியலிலும், தொல்லியலும் ஆர்வம் கொண்டிருந்த அவர் அது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த போதுதான், 1863 ஆம் ஆண்டில், பல்லாவரம், அத்திரம்பாக்கம், குடியம் ஆகிய பகுதிகளில் கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். மூங்கிலில் செருகக்கூடிய சிறிய வகை கல் ஈட்டி முனைகள் பல்லாவரத்தில் கிடைத்தன. தொடர்ந்து பூண்டிக்கு அருகில் உள்ள பரிக்குளம் கிராமத்தில் ஐந்து இலட்சம் ஆண்டுகள் பழமையான செம்மண் சரளைக் கல் படுகையில் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். பூண்டிக்கு வடக்கில் குடியம் பகுதியில் மிகப் பழமைவாய்ந்த, நீளமான பதினாறு குகைகளைத் தேடியலைந்து அகழ்வாராய்ச்சி நடத்தி அங்கு ஏராளமான கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பழங்கற்கால மனித இனம் தமிழ்நாட்டில் வாழ்ந்ததை உலகிற்கு அறியப்படுத்தக் காரணமானார்.
நிலவியல், தொல்லியல், மானுடவியல், படிமவியல் அறிஞராக வளர்ச்சி நிலை பெற்ற குரூஸ், தொடர்ந்து தென்னிந்தியா முழுமைக்கும் சென்று ஆய்வு செய்தார். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் இயற்கையாக அமைந்த ‘பெலும்’ குகைகளைக் கண்டுபிடித்தார். கற்கால மனிதர் தொட்டு, புத்தத் துறவிகள் காலம் வரையில் பெலும் குகையில் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்த மானுடவியல் வரலாறும் அவரால் வெளியானது. பெலும் குகைப் பகுதியில் நாற்பதடி உயரம் கொண்ட புத்தர் சிலை ஒன்று உள்ளது.
மேலும், நெல்லூர், ஹைதராபாத், மைசூர், குஜராத் ஆகிய பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்ட புரூஸ், கர்நாடகாவைச் சேர்ந்த பெல்காம் மாவட்டத்தில் காண்டாமிருகத்தின் மண்டை ஓட்டுப் படிமத்தைக் கண்டெடுத்தார். 1883 ஆம் ஆண்டில் திருநெல்வேலி, செய்துங்கநல்லூர் பகுதியில் தேரி எனப்படும் மணல் குன்றுப் பகுதிகளிலும், சாயர்புரம் தேரிப் பகுதிகளிலும் நுண் கற்கருவிகளைக் கண்டெடுத்தார். அங்கு நுண் கற் கருவிகள் தயாரிக்கும் தொழில் கூடம் இருந்ததையும் புரூஸ் வெளிப்படுத்தினார். அது இடைக் கற்காலத்தைச் சேர்ந்த நுண் கற்கருவிப் பண்பாடு என்று அறியப்படுகிறது.
அவருடைய தொடர் ஆய்வுகளுக்காக இராபர்ட் புரூஸ் பூட், “இந்தியத் தொல் பழங்கால வரலாற்றின் தந்தை” எனப் போற்றப்படுகிறார்


