தூத்துக்குடி சிவன் கோவில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான திருவாதிரை திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடந்தது.
இதையொட்டி இன்று அதிகாலை 1.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 2 மணிக்கு திருவனந்தல், 3.15 மணிக்கு நடராஜ பெருமாள் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம், 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி 4.30 மணிக்கு கால சக்தி பூஜைகளும் நடந்தன. காலை 6மணிக்கு ஸ்ரீநடராஜ பெருமாள் சுவாமி அம்பாள் பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு பசு மற்றும் நடன தீபாராதனை நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்பு நடராஜ பெருமாள் சிவகாமி அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலிலிருந்து புறப்பட்டு கீழ ரத வீதி தெற்கு ரத வீதி மேற்கு ரத வீதி வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் சிவன் கோவிலை அடைந்தது. பின்னர் நடன சேர்க்கை தீபாரதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்


