சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (ஏப்ரல் 16, 1889 – டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896-ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் அநாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஹான்வெல் பள்ளி என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர்.
சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்.
சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட் (Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.


