கடந்த வாரம் பெய்த தொடர் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் வருகை தந்தார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சிக்கு வருகை தந்தார். அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகள் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அதன் பின்னர் பேசுகையில், மிகவும் மன வருத்தமாக உள்ளது. இந்த மழை குறித்து தமிழக முதல்வர் தீவிரம் காட்டவில்லை. இங்கு மழை பெய்த நேரம் முதல்வர் டெல்லியில் இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதில் கூட சரியாக செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் 1 மணி நேரம் பார்த்து விட்டு சென்றுவிட்டார். ஒரு மணி நேர முதல்வராகத்தான் தமிழக முதல்வர் செயல்பட்டுள்ளார். தென்மாவட்ட மக்களை மாற்றான் தாய் மனப்பான்மையில் பார்த்து செயல்பட்டுள்ளார். தற்போது தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து வருகிறார். ஆனால் ஒரு தமிழக முதல்வருக்கு இருக்கும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்புடன் பந்தாவாக வலம் வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான பாதிப்புகள் உள்ளது. பிரச்சனைகளுக்கு தகுந்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும். தாமிரபரணியை சீரமைக்க நாம் அனைவரும் முயற்ச்சிக்க வேண்டும். தாமிரபரணியை நாம் பாதுகாத்தால், தாமிரபரணி நம்மை பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.


