வாணி ஜெயராம் இயற்பெயர்:கலைவாணி; 30 நவம்பர் 1945 – 4 பெப்ரவரி 2023 பன்மொழி திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தது. அன்று முதல் நான்கு தலைமுறைகள் பின்னணி பாடினார். இந்தியத் திரைப்படப் பாடல்களோடு தனி ஆல்பம் மற்றும் பக்திப் பாடல்களையும் பாடினார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்பட்டார்.
வாணி ஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் துரைசாமி ஐயங்கார்–பத்மாவதி ஆவர்.
தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார். அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில் போன்ற பாடல்களை தமிழ்த் திரையுலகில் பாடினார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணி ஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.


