கமிஷன் பிரதிநிதிகள் ஆற்றுக்குள் நுழைந்தனர். அவர்களை கூட்டி வந்த வாகனங்கள் எல்லாம் கரையிலேயே நின்றன.
கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் நடந்தே சென்றனர். அவர்களோடு மாரியப்பன், காளி இரண்டு பேரும் நடந்தே வந்தார்கள்.
லோக்கல் காவல்துறை, வருவாய் துறை , பொதுப்பணித் துறையினர் உடன் வந்தனர். புகைப்படம் வீடியோ எடுக்கவும் இரண்டு நபர்களை நியமனம் செய்து இருந்தார்கள். அவர்களும் படம் பிடித்தப்படியே வந்தனர். பத்திரிக்கை நிருபர்கள். தொலைக்காட்சி நிருபர்களும் ஏதாவது சுவராஸ்மான தகவல் கிடைக்காதா? என நினைத்துக் கொண்டு பின்னாலேயே ஓடி வந்தனர்.
இதற்கு முன்னாள் இங்கே தாமிரபரணி எப்படி இருந்தது என உள்ளூர் மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
அங்கு வந்த மூதாட்டி அழுதபடியே பேசினார். “யய்யா நம்ம எல்லோருமே ஏமாந்து போயிட்டோம்யா. வேலை தாரேன்னு சொன்னானுவ. அதை நம்பி சரின்னுதலையசைச்சோம். பால் கறக்க வந்தவனுவ மடுவை அறுத்த கதையா எங்க ஆத்தை அலங்கோலம் பண்ணுட்டு போயிட்டானுலே”.
அந்த மூதாட்டியை கட்டி பிடித்து ஆறுதல் சொன்னான் காளி.
“அதான் அய்யாமாரு பாக்க வத்திருக்காவலா. நிச்சயம் நல்ல முடிவு எடுப்பாவ?”
“எல்லாமே முடிஞ்சி போச்சி. இனிமே என்னத்தை பாக்க போறவா? எப்படி கம்பீரமான ஓடின ஆறு. இப்படி ஆகி போச்சே” ஆச்சியின் ஒப்பாரி தாங்க முடியவில்லை. மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வந்தது.
கமிஷன் அதிகாரிகள் ஆற்றில் கண்ட காட்சி பதை பதைக்க வைத்தது. “அடப்பாவிகளா? என்னடா பண்ணி வைச்சிருக்கிய?” வந்தவர் தன்னை அறியாமலேயே புலம்பி விட்டார்.
ஒரிடத்தில் மணலை அம்பாரமாக குவித்து வைத்திருந்தனர். இந்த மணல் எல்லோமே தண்ணீருக்குள் இருந்து எடுத்து உலர வைத்திருந்தனர். அப்போது தான் அதிக அளவு மணல் லாரியில் ஏற்ற முடியுமாம்.
ஒரிடத்தில் உள்ள ஆழத்தினை அளக்க சுமார் 10 அடி குச்சியை உள்ளே விட்டனர். ஆனால் அடித்தளம் வரை அந்த குச்சி போய் சேரவில்லை. எனவே சுமார் 30 மீட்டர் கயிறை கையில் பிடித்துக்கொண்டு நீச்சல் தெரிந்த ஒருவர் அடித்தளம் வரை சென்று அளவை குறித்தார்.
அடப்பாவிகளா? 30 அடி வரைக்கும் குழித் தோண்டி மணலை எடுத்து இருக்கிறார்கள். விட்டால் எதிர் திசையில் இருந்து மேலை நாட்டுக்குள் சென்று இருப்பார்கள் போல. ஒரு சினிமா படத்தில் கூட போர் போடுகிறேன் என்று போட்டுக்கொண்டே இருக்கும் போது, அதில் இருந்து வெளிநாட்டவர் வருவார்களே. அதுபோல ஆற்றில் ஓட்டை போட்டிருந்தார்கள்.
மற்றொரு இடத்தில் களி மண் அதிகமாக இருந்த காரணத்தினால் அதை தொடவே இல்லை. அது அப்படியே மேடாக இருந்தது. அதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.
இன்னொரு இடத்தில் மிகப்பெரிய தடம் போடப்பட்டிருந்தது. அந்த தடம் ஆற்றுக்குள் மிகப்பெரிய தற்காலிக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. தற்காலிக சாலை, நிரந்தர சாலை போலவே காட்சியளித்தது.
அதில் ஒரு புறம் வழியாக செல்லும் லாரியும் மற்றொரு புறம் வழியாக திரும்பி வரும் லாரியும் வர சாலை அமைக்கப் பட்டிருந்தது. மணலில் வாகனங்கள் பதியாமல் இருக்க கிணற்று சரல்வேறு அடித்து போட்டிருந்தார்கள். மணல் குவாரி முடிந்தவுடன் இந்த கிணத்து சரலையெல்லாம் எங்கே அள்ளப்போகிறார்கள். இங்கேத்தான் கிடக்க போகிறது. தாமிரபரணி நதியின் போக்கை மாற்றப்போகிறது.
புராண கதைகளில் படித்து இருக்கிறோம். நவ கைலாயங்களை பிரம்மாவின் பேரன் உரோமச முனிவர், தனது குரு நாதரின் உத்தரவு படி 9 மலர்களை விட்டு , அது எங்கெல்லாம் போய் சேருகிறதோ. அங்கெல்லாம் லிங்கத்தினை பிரதிட்சை செய்து அதற்கு நவ கைலாயம் என பெயரிட்டு வணங்கினாராம். அந்த இடத்தினை விட்ட தற்போது தாமிரபரணி சற்று விலகியே ஓடுகிறது.
தாமிரபரணி தன் வழியை மாற்றிக்கொண்டது. இதற்கு சுமார் 2 ஆயிரம் வருடத்தினை இயற்கை எடுத்துக்கொண்டது. ஆனால் இங்கே இரண்டே மாதத்தில் பாழாய் போன மனிதன் தாமிரபரணியின் வழியை மாற்றி விட்டான். ஊற்றுகளை அழித்து விட்டான். இங்கு வாழ்ந்த உயிரனங்களை அழித்து விட்டான்.
மனிதன் கால்பட்ட இடம் தான் கட்டமண் என்று பழமொழி சொல்வார்கள். இங்கே அவன் கால் பதித்த ஆற்று மணலை விற்க நதியையே கூறுபோட்டுவிட்டானே.இதற்கு அரசும் உடந்தை. கூறுகெட்டவன் வருங்கால சன்னதி எப்படி தண்ணீர் குடிக்கும். விவசாயம் எப்படி செய்வார்கள். தொழிற்சாலையை எப்படி இயக்குவார்கள். அனல் மின்சாரம் எப்படி தயார் செய்வார்கள் எதையும் அவன் நினைத்துப் பார்க்க வில்லை. இன்றைக்கு அவன் வயிற்றை நிரப்ப வேண்டும். வசதியாக வாழவேண்டும் என்பதற்காக தன் கைவிரலை எடுத்து தன் கண்ணையே குத்தி விட்டானே.
ஆண்டவனே இது என் நதியா? என நேற்று இரவு அழுது துடித்தானே காளி. அதுபோலவே இன்று ஆற்றக்குள் இறங்கி ஆழம் பார்க்கும் நிலையை பார்த்து அதிர்ந்தே போய் விட்டனர் மற்றவர்களும்.
கமிஷன் வந்த அதிகாரிகளும் வருதப்பட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரி கூப்பிட்டனர்.
“முறைப்படி மணல் அள்ள வேண்டும் என்றால எத்தனை அடி அள்ளுவீர்கள்”.
“3 அடி”.
“இங்கே 30 அடி ஆழம் இருக்கிறதே. எப்படி அள்ள விட்டீர்கள்”.
“ஏற்கனவே இந்த இடத்தில் தாமிரபரணி 30 அடி ஆழத்தில் ஓடியிருக்கு அய்யா”.
பச்சையாக பொய் சொன்னார் அந்த அதிகாரி.
காளி அவசரமாக மறுத்தான்.
“நான் சின்ன புள்ளையில இருந்து இங்கத்தான் இருக்கேன். இவ்வளவு ஆழமா எங்க ஊரு ஆறு இருந்ததே கிடையாது”.
பொதுப்பணித்துறை அதிகாரி வாயை மூடினார்.
“ஏன்யா நீங்களும் இந்த நாட்டு குடிமகன் தானே. உங்களுக்கு தண்ணீ தருத தாமிரபரணியை இப்படி கூறு போட்டு இருக்கீயளே. நியாயமா?”
அமைதியாக இருந்தனர்.
தாசில்தாரை கூப்பிட்டார். “ஏன் ஸார் நீங்க இதெல்லாம் பார்க்க மாட்டீங்களா?”
“இல்லை ஸார் இது பொதுப்பணித்துறை அதிகாரி சம்பந்தப்பட்டது. நாங்க லாண்ட் ஆடர் என்றால் மட்டும்தான் வருவோம்”.
“அடிபுடி போட்டு யாராவது சாவணும். அப்போ தான் வருவீங்க. நல்லா இருக்கு சார் உங்க நியாயம்”.
அங்கே மயான அமைதி நிலவியது. அந்த இடத்தினை அளந்தனர். மாரியப்பனும் காளியும் ஓடி ஒடிபோய் டேப் பிடித்து உதவி புரிந்தனர்.
அம்பாரமாக கூட்டி வைத்திருந்த மணலை அளந்தனர். இந்த இடத்தில் மடடும் 10 லட்ச ரூபாயக்கு மணல் இருக்கு. அள்ள விட்டா ஒரே நாளு ராத்திரி அள்ளி கொண்டு போயிருப்பாங்க”.
மனதுக்குள் நினைத்துக்கொண்டான் காளி.
தொடர்ந்து நடந்தனர். “இந்த ரோடு எதுக்கு போட்டீங்க”.
அமைதியாக இருந்தார் பொதுப்பணித்துறை அதிகாரி.
“இங்க பாருங்க ஆத்துக்குள்ள ரோடு போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்குல்லா?”.
“ஆமாம்”.
“அப்படி இருக்கும் போது எப்படி அனுமதிச்சீங்க. அது மட்டுமா? 100 க்கு மேற்பட்ட லோடு கிணத்து சரலை அள்ளி கொட்டியிருக்கீங்களே. இதை அப்புறப்படுத்தி தருவீங்களா? இந்த சரல் இங்கே இருந்தா எப்படி நதியில் ஊற்று ஊரும். மக்கள் நடமாட முடியுமா?. கால்நடைகள் வந்து தண்ணீ குடிக்க முடியுமா?”
அவரிடம் யாருமே பதில்சொல்ல வில்லை.
கொஞ்ச தூரம் நடந்தார்கள்.
அங்கே நிறைய உறை கிணறு இருந்தது.
“இந்த இடத்தில் இருந்து எத்தனை ஊருக்கு தண்ணீர் போவுது”.
“மேல் கரையில் 65 கிராமத்துக்கும், கீழ் கரையில 101 கிராமத்துக்கு கூட்டு குடிதண்ணீர் கொடுக்கிறாங்க. 8 உறை கிணறு போட்டு இருக்காங்க”.
இப்போ இந்த கிணறு வரைக்கும் குழி தோண்டி மணல் அள்ளியாச்சு. இனிமே ஊற்று எங்க இருந்து வரும் மக்களுக்கு குடிதண்ணீர் எப்படி கொடுப்பிய”.
“அது ஒண்ணும் பிரச்சனை இல்லை சார். தண்ணி ஒழுங்கா போவும் சார்”.
“எப்படி போவும்” காளி இடம் மறித்தான்.
“இப்பவே எல்லா ஊருக்கும் மண்டி தண்ணீ தான் போவுது சார். அதுவும் ஆற்று மணலை அள்ளிட்டாவ. களி மண்தான் இருக்கு. குடிக்க தண்ணீ களி மாதிரி வீச்சம் அடிக்கு. ஒரு காலத்தில தேங்காய் தண்ணீ மாரி இருந்த தண்ணீ இப்போ நிறமும் மாறி போச்சு. சுவையும் மாரி போச்சு ஸார்”.
கமிஷன் வந்தவர் அந்த வாக்குமூலத்தினை பதிவு செய்து கொண்டார். “குளிக்கிற இடத்தினை புறாவும் தோண்டி பள்ளம் பள்ளமா போட்டுட்டாங்க. ஆத்து வெள்ளம வந்தா சுழி வந்து பொதுமக்களை இழுத்துட்டு போய் கொன்னு போட்டுரும். இனிமே நம்பிக்கையோட நம்ம ஆத்துல குளிக்க முடியாது சார்”. மாரியப்பன் சொன்ன அந்த வார்த்தை¬யும் பதிவு செய்து கொண்டனர்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஏதோ சொல்ல வந்தார். “நிறுத்துங்க சார். நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். பொதுப்பணித்துறை பொறுப்பு நதியை காப்பாத்துறது. இப்பே கண் முன்னாலேயே அழிச்சி, அழிச்சவங்களுக்கு வாக்கலத்து வாங்கிறீங்க நிப்பாட்டுங்க”. கோபமாக பேசினார் கமிஷன் வந்தவர்.
அடுத்து 10 மீட்டர் கூட நடந்து இருக்க மாட்டார்கள். கரையை உடைத்து மிகப்பெரிய வழி போட்டு இருந்தார்கள்.
“என்ன சார் இது கைபர் போலன் கனவாயா? இமயமலையை குடைஞ்சு போட்ட மாதிரி போட்டு இருக்கீங்க”.
பொதுப்பணித்துறை அதிகாரி மௌனமாக இருந்தார். “இப்போ வாய் தொறங்க. மணல் அள்ளும் போது கரையை உடைக்கலாமுன்னு எங்கயாவது ரூல்ஸ் இருக்கா”.
“இல்லை சார்”.
“பொறவு எதுக்கு உடைக்க விட்டீங்க”.
அமைதியாக இருந்தார்.
“நான் தாமிரபரணி ஆற்றுக்கு வரும் போதே ஆங்கிலேய கலெக்டர் பேட் எழுதுன நூலை படிச்சிட்டுத்தான் வந்தேன். இங்கிலிஸ்காரனே. வெள்ளம் வந்தா ஊருக்குள்ள போகக்கூடாதுன்னு கரையை போட்டுறுக்கானுவ. அதுவும். ஆத்தூர் பக்கத்தில அடிக்கடி வெள்ளம் வருதுன்னு இரட்டை கரையெல்லாம் போட்டு இருக்கானுவ. அப்படி கரை அமைக்கிறது இப்போ எவ்வளவு கஷ்டம். ஆனால இருக்கிற கரையை உடைச்சி இருக்கீங்க. திரும்ப மூடி கொடுப்பீங்களா? இல்லாட்டி இப்படியே போட்டுருவீங்களா?”
திரும்பவும் மௌனம் காத்தார் பொதுப்பணித்துறை அதிகாரி.
தாசில் தார் ஏதோ பேச வந்தார்.
“சார் நீங்களும் சும்மா இருங்க. இங்க இருக்கிற செங்கல் சூளைக்கு குறுமண் அள்ள பெர்மிஷன் கொடுத்து இருக்கீங்க. அவுக முறைப்படியா அள்ளியிருக்காங்க. அவங்களும் ஆத்தங்கரையை குறி வச்சி கரையை புறாவும் அள்ளிட்டாங்க. நீங்க என்னைக்காவது போய் பாத்திங்களா?”
“இல்லை சார் அவங்களுக்கு பைன் அடிச்சிருக்கோம்”.
“3லட்ச ரூபாய் மண் எடுத்து இருப்பாங்க. நீங்க 3 ஆயிரம் பைன் போட்டு இருப்பீங்க. உங்க செலவுக்கு 30 ஆயிரம் வாங்கியிருப்பீங்க. அப்படித்தானே”.
தாசில்தார் தலையை கவிழ்ந்தார்.
“அது வெறும் சவுடு மண்ணுத்தான்.”
“சவுடு மண்ணுன்னா மண் இல்லையா? அதுவும் கனிமம் தானே?”
காளிக்கும் மாரியப்பனுக்கும் சந்தோசமாக இருந்தனர். நல்ல அதிகாரி. என்ன அழகாக பேசுகிறார். நதியை காப்பாற்ற நிரந்தர ஸ்டே ஆடர் வாங்கி தந்து விடுவார். அவர்கள் இருவர் மனதிலும் நம்பிக்கை வந்தது.
தாசில்தார் ஸ்டேட்மெண்ட், இவர் பேசுறது எல்லாத்தையும் வீடியோ கமரா மேன் பதிவுசெய்தார். நல்ல சுறுசுறுப்பான பையன், அவனும் ஆர்வமாக வேலை செய்து கொண்டிருந்தான்.
“மிஸ்டர் கமரா மேன். ரிக்காடிங் அப்படியே இருக்கணும். எல்லோரும் பேசுறது எனக்கு அப்படி கேட்கணும். அதனால ஒன்றை விடாம அத்தனையும் பதிவு பண்ணுங்க”.
“சரி சார். சரி சார்”
“இது எல்லாத்தையும் நீதிபதிக்கிட்ட போட்டு காட்டணும். இந்த அதிகாரிங்க லட்சணமும் அவருக்கு தெரியணும்”.
“சரி சார்” . வீடியோ கமரா மேன் தலை யசைச்சார்.
மற்றொரு பக்கம் வந்தார்கள். அங்கே மேற்கரையில் இருந்து கீழ்கரைக்கு ஆற்றை கடந்து செல்ல நிறைய சிமெண்ட் குழாய் போடப்பட்டு. அதில் சாலை போட்டு இருந்தார்கள்.
“இது என்ன ராமர் பாலமா? ஒரு இடத்தில இருந்து மறு இடத்துக்கு அணில் போட்ட பாலமா?” கமிஷன் அதிகாரி கிண்டலாக கேட்டார்.
“ஆற்றில் பாலம் போட வேண்டும என்றால் தலைமை செயலகம் வரை போய்த்தான் அனுமதி வாங்க வேண்டும். இங்கே இந்த பாலம் போட உங்களுக்கு யாரு அனுமதி தந்தா”.
எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
எல்லோருக்கு பேச பயம்.
இவர்கள் ஏதாவது பேச , அதை வீடியோ கமரா மேன் பதிவு செய்ய தப்பா போய் விடுமோ என பயந்தனர்.
“ஏன் வாயில என்ன கொலைக்கட்டையா வச்சி இருக்கீய பேசுங்களேன்”.
“நல்லா தோண்ட விட்டுடிங்க. சிமெண்ட குழாய் எல்லாத்தையும் உள்ளே தூக்கி போட்டுட்டீங்க. இனிமே இதை எடுக்க மாட்டீங்க. ஆத்து வெள்ளம் வந்தா. தப்பி தவறி ஆத்துல வெள்ளத்தில நீந்தி வரும் கால்நடைகள், ஏன் மனிதர்கள் கூட இந்த சுழலில சிக்கி சாகப்போறங்க. ஆக. மக்களுக்கு நன்மை மட்டுமே தந்த தாமிரபரணி இனி எல்லோரையும் பலி வாங்கி பாவ ஆறா மாறப்போவுது”.
அவர் பேச்சு எல்லாமே காளிக்கு மாரியப்பனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. தாங்கள் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்தார்களோ, அதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.
நிச்சயம் நதி காப்பாற்றப்படும் என நம்பினர்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் தாமிரபரணி ஆற்றக்குள்ளே நடந்து வந்தனர்.
“ இப்படி மணல் அள்ளிட்டீங்க. மணல் இருந்தா. ஆறு அழகாய் இருக்கும். அதுல நீர் ஊற்று இருக்கும். கருவேலம் மரம் முளைக்காது. ஆடு மாடு மேயும் மேச்சல் நிலமா இருக்கும். ஆகாய தாமரை தங்காது. இப்போ எல்லாத்தையும் அழிச்சிட்டுங்க. இனிமே 20 வருசத்துல தாமிரபரணி தன் தரத்தை இழந்து கூவமா ஆயிடுமே”.
காளி. “அய்யா அதை காபாத்த தான் நீங்க வந்திருக்கீங்க. நிரந்தரமா தாமிரபரணி ஆற்றுல தடை உத்தரவு கிடைக்க ஆவண செய்யுங்க. நல்லா இருப்பீய”.
“என்ன காளி இப்படி பேசுற. நானும் நம்ம ஊரு காரன் தான். தாமிரபரணி கரையில பிறந்தவன் தான். தாமிரபரணியை ரசித்தவன்தான். நம்ம நதியை கூறுபோட்டுட்டானுவ சண்டாளனுவ. அவனுவள நாம கோர்டில ஏத்தனும். அதுக்கு சரியா ரிப்போர்ட் தயார் செய்யணும். நீயும் மாரியப்பனும் , துணைக்கு வேறு யார் இருந்தாலும் கூட்டிட்டு வாங்க. நாமா திருநெல்வேலியில வச்சி நல்லதொரு அறிக்கை தயார் செய்யணும்”.
“சரியய்யா. நாங்க கண்டிப்பா வந்திருதோம்”.
கடைசியாக இருந்த இடத்திலும் மிகப்பெரிய பாதை கரையை உடைத்து போட்டிருந்தார்கள். இவர்கள இறங்கிய கார். அந்த இடத்தில் நின்றது. அதில் அதிகாரிகள் ஏறினர்.
அவரை தொடர்ந்து ஒவ்வொருவர் வாகனமும் கிளம்பியது.
பொதுப்பணித்துறை அதிகாரியும், தாசில்தாரும் இவர்கள் இருவரையும் முறைத்து பார்த்தபடியே கிளம்பினார்கள்.
ஊர் மக்கள் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்து நின்றனர்.
அந்த குண்டு குழியுமான ரோட்டில் அந்த வாகனங்கள் புழுதி பறக்க சென்றது. அந்த புழுதி நன்றாக இருந்த ஊரை , அழகை கெடுத்து தூசிப்பட வைத்துக் கொண்டிருந்தது.
காளியும் மாரியப்பனும் நினைத்த படி இனியாவது தாமிரபரணி காப்பாற்ற படுமா?
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


