சங்கரலிங்கதேவர் கனவில் அம்மன் தோன்றி, பூசாரியை அம்மன் பலிவாங்கிய விவரத்தினை முதன் முதலில் கூறிய சம்பவம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் அம்மன் அருளால் அவர் கொடுக்கும் வரம் நிறை வேறியது. இதனால் மக்கள் மிகவும் சந்தோசமடைந்தனர்.
முன்னீர் பள்ளத்தினை சேர்ந்த வெங்கட சுப்பர அய்யர் என்பவர் கோயிலுக்கு வந்தார். சாமியாடி சங்கரலிங்கத்திடம் “தனக்கு நீண்ட நாள் குழந்தையில்லை. குழந்தை வரம் வேண்டும்” என தனது துணைவியாரோடு வந்து நின்றார். கண் கலங்கி மனமுருகி அவர் அம்மனை வேண்டி நின்ற காட்சி கண்போர் நெஞ்சை கரைப்பதாக இருந்தது. அப்படி இருக்கும் போது அம்மனுக்கு மனம் கரையாமல் இருக்குமா? என்ன?.
சங்கரலிங்கம பூசாரி அம்மனை வணங்கி அவருக்கு திருநீறு கொடுத்தார். அடுத்த 10 வது மாதம் கழித்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கேட்ட வரத்தினை அம்மன் சாமியாடி அருள்வாக்கால் கொடுக்கிறார் என சங்கரலிங்க தேவர் புகழ் மேலும் பல இடத்திலும் பரவியது.
அந்த காலத்தினை பொறுத் தவரை சாமியாடிகள் தான் வீட்டுக்கு வீடு சென்று கோயில் காரியங்களுக்கு நெல் பிரிப்பார்கள். ஐப்பசி மாதம் அறுவடை முடிந்த பின் வீடடுக்கு வீடு சென்று அம்மன் சாமியாடி நெல் பிரிப்பது வழக்கம். வீட்டுக்கு ஒரு மரக்கால் நெல் கொடுப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் சாமியாடி வருபவருக்கு மஞ்சள் நீராட்டும் செய்வார்கள்.
அந்தகாலத்தில் தேவர் சமுதாயத்தில் இரண்டு குடும்பங்கள் முன்னீர் பள்ளத்தில் இருந்தனர். ஒரு குடும்பம் மேல்பாதி, மற்றொரு குடும்பம் கீழ்பாதி குடும்பம் என போற்று வார்கள். அவர்களுக்கு சொந்தமான உச்சினிமகாளி, சந்தன மகாளி மற்றும் 21 பூடங்களை வைத்து வணங்கி வந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு தெய்வங்கள் பிரதான தெய்வமாக விளங்கும். குறிப்பாக கவுன்சிலர் செல்வ சங்கர் அவர்களின் குலதெய்வம் பலவேச காரனாவார். ஆனாலும் வீரபாண்டி செல்லாயி அம்மனின் கோமரத்தான் சங்கரலிங்க தேவர் மீது எல்லோருக்கும் பற்றும் பிரியமும் உண்டு. குறிப்பாக ஊரில் உள்ள பிற சமுதாய கோயில்களுக்கும் தீர்த்தம் எடுக்கும் போதும் தீருநீறு கொப்பரை கொடுத்து சுவாமியாடிகளை வழியனுப்பி வைக்கும் பொறுப்பு சங்கரலிங்க தேவரையே சாரும்.
இந்தகாலகட்டத்தில் சாமியாடி உச்சினிமகாளி, சந்தனமகாளி கோயில் அருகே செல்கிறார். அப்போது சாதி கொடுமை தலை விரித்து ஆடுகிறது. வீரபாண்டி செல்லாயி அம்மன் கோயிலுக்கும் உயர் சாதிகளை தவிர மற்றவர்கள் செல்ல இயலாது. காவல்காரர்களாக தேவர் சமுதாய மக்களுக்கும் அதே நிலைத்தான் இருந்தது.
எனவே கோமரத்தாடி சங்கரலிங்க தேவருக்கு பாத பூஜை செய்து மஞ்சள் நீராட்டி விட்டு கோரிக்கை ஒன்றை வைத்தனர் அவரின் உறவுக்கார மக்கள். “அம்மா உன் கோயிலுக்கு எங்களால் உள்ளே நுழைய இயலவில்லை. எனவே தயவு செய்து எங்களோடு நீ இருக்க வேண்டும் அம்மா. அதற்கு எங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடு தாயே” என கேட்டு நின்றனர்.
உடனே ஆதாளி வந்த சங்கரலிங்க தேவர் தனது கையில் இருந்த சூலாயுதத்தினை அருகில் உள்ள தரையில் ஓங்கி குத்தினார். “இங்கே பார் இந்த இடத்தில் தான் இருக்கிறேன். இங்கே ஒரு பூடத்தினை போட்டு நீங்கள் வணங்கி நில்லுங்கள். உங்களுக்கு வேண்டிய அருளை தருவேன்” என்று கூறினார்.
அன்று முதல் இன்று வரை அந்த இடத்தில் வீரபாண்டி செல்லாயி அம்மனை அந்த மக்கள் அவ் விடத்தில் வைத்தும் வணங்கி வருகிறார்கள்.
மிகவும் பிரபலமாக பேசப்பட்ட சாமியாடியாக சங்கரலிங்கதேவர் இருந்தார்.
ஆகவே அவர் உயிரோடு இருக்கும் போதே கோயிலுக்குள் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. பெரும்பாலுமே கோயிலை கட்டிய மகராஜா சிலையை தான் கோயிலுக்குள் தூணில் வைப்பது வழக்கம். ஆனால் ஒரு கேமரத் தாடிக்கு கோயிலில் சிலை வைத்து இருக்கிறார்கள் என்றால் அது முன்னீர் பள்ளம் வீரபாண்டி செல்லாயி அம்மன் கோயிலில் மட்டுமே. அதுவும் சங்கரலிங்க தேவருக்கு மட்டுமே. இதுவே மிகச்சிறப்பாகும்.
அவர் முறுக்கிய மீசையுடன் உருட்டிய விழியுடன் மிடுக்கான தோற்றத்தில் அம்மனை வணங்கிய படியே உள்ளார். கோயிலுக்கு சென்று அம்மன் அருளை பெற்று வெளியே வருபவர்களும் அவரை வணங்கியே வெளியே செல்கிறார்கள்.
கோயிலுக்குள் நுழைகிறோம். கோயில் வடக்கு நோக்கி உள்ளது. உள்ளே முன் கோபுரத்தில் முருகன் கணபதிக்கு இடையில் அம்மன் முன்கோபுரத்தில் அமைந்துள்ளார். உள்ளே நுழைந்தால் பலிபீடம் அருகே அம்மனை நோக்கி வேதாளம் இருக்க, கோயிலுக்குள் நுழைகிறோம்.
இந்த அகிலத்தினை காக்கும் செல்லாயி அம்மன் சிரித்த முகத்துடன் “பக்தனே உனக்கு என்ன வேண்டும் வர கேள் அள்ளித் தருகிறேன்” என்று கூறும் வண்ணம் நம்மை எதிர்நோக்கி வரம் தர காத்து இருக்கிறாள். அவளை கண்டு வணங்கும் போதே நமக்கு எல்லா நலனும் வளமும் கிடைக்கிறது.
கோயிலுக்குள் தர்மசாஸ்தா, விநாயகர் ஆகியோர் சிலை பிரகாரத்தில் உள்ளது. சுவரில் சிவலிங்கம் புடைப்பு சிற்பமாக உள்ளார். ஸ்ரீபரவர் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து அருள் தருகிறார்கள். கோயிலை சுற்றி வருகிறோம். உள் வளாகத்தில் ஸ்ரீ காத்தவராயன் அருள் தருகிறார். அம்மனின் இடது புறத்தில் முப்பிடாரி அம்மன் தனிச்சன்னதியில் உள்ளார். எதிரே வேதாளமும், அருகில் விநாயகர் மற்றும் வேம்பு மரமும் பிரமாண்டமாக உள்ளது.
முப்பிடாதி அம்மனுக்கு 15.03.2009 அன்று கும்பாபிசேகம் நடந்துள்ளது. இதற்கான கல்வெட்டு அங்கே பொறிக்கப்பட்டுள்ளது. பங்குனி மாதம் 2 ம் தேதி ஞாயிற்று கிழமை சுவாதி நட்சத்திரம் பஞ்சமி திதி, மீன லக்னத்தில் காலை 7.33க்குள் 7.50க்குள் கும்பாபிசேகம் நடந்துள்ளது. இந்த தகவல் முப்பிடாதி அம்மன்கோயில் வளாகத்தில் உள்ளது.
இந்த கோயில் கோபுரம் , கலசம், ஸ்தாபனம், மேல் தளம், உள்தளம், பீடத்துடன் முப்பிடாதி, சிற்ப ஆகம சாஸ்திரப்படி திருப்பணி செய்து கொடுத்தவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லத்துரை பாண்டியன் &ஆனந்தம்மாள் குடும்பத்தினர். இந்த தகவலை கல்வெட்டு கூறுகிறது.
பிரதான கோயில் சுவற்றில் மற்றொரு கல்வெட்டு உள்ளது.
அந்த கல்வெட்டில் 15.03.2009 ல் வீரபாண்டி செல்லாயி அம்மனுக்கும் கும்பாபிசேகம் நடந்துள்ளது என்றும் இந்த கும்பாபிசேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், முதன்மை செயலர் மற்றும் ஆணையர் த. பிச்சாண்டி, உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஆய்வாளராக கே.சீதாலெட்சுமியும், செயல் அலுவலராக மா. வேல் முருகன் ஆகியோர் இருந்துள்ளனர் என்ற தகவலும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் கும்பாபிசேகத்தில் உள்ள கல்வெட்டுகளில் எல்லாம் ஸ்ரீ உத்திர சொக்க விநாயகர் நல்லாசியுடன் என்று குறிப்பிட்டுள்ளனர். அதைபற்றிய தகவல்களை நமது கவுன்சிலர் செல்வ சங்கரிடம் கேட்டோம். மேலும் அந்த தகவலோடு கோயிலை பற்றிய அற்புத தகவல்களையும் நம்மிடம் கூறினார்.
(நதி வற்றாமல் ஓடும்)


