கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மகாமண்டபத்தில் உள்ள விநாயகர், மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
இரவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று முருக பெருமானை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


