தபால் துறை மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் (பொறுப்பு) வை.தீத்தாரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், வீட்டிலிருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேலான தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, தபால் துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தியும், முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து உள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், ஓய்வூதிய எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூலமாகவும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 450-க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும், வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகிறது.
எனவே தமிழக அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


