உலக அறிவியல் நாள் (World Science Day ) என்பது சமூகத்தில் அறிவியலின் முதன்மையான பாத்திரத்தை உரத்துசுட்டும் பன்னாட்டுக் கடைபிடிப்பு நாளாகும். இந்நாள் நவம்பர் மாதம் 10 ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் நடைமுறையில் எழும் அறிவியல் சிக்கல்களைப் பரந்துபட்ட மக்கள் மன்றத்துக்குக் கொண்டுசென்று விவாதங்களை முன்னெடுக்கும் நாளாகும். உலக அறிவியல் நாள் பன்னாட்டவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோவால்) 2001 ஆம் ஆண்டில் பறைசாற்றப்பட்டு, 2002 ஆம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.
உலக அறிவியல் நாள் அறிவியலைச் சமூகத்தோடு நெருக்கமாகப் பிணைத்து, அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிகளை மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்துதலை உறுதிப்டுத்தும் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. மேலும் நமது வாழிடமாகிய புவியுலகம் பற்றிய புரிதலினை விரிவாக்கும் அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பை உரத்த சுட்டிக் காட்டுகிறது; நமது சமூகத்தின் நீடுதிற வளர்ச்சிக்கு வழிசமைக்கிறது.


