தேங்காய் சீனிவாசன் (21 அக்டோபர் 1937 – 9 நவம்பர் 1987) 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர் கல் மனம் என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.
தேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளை குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 50-வது அகவையில் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் உயிரிழந்தார்.


