தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் மிதமாக இருந்து வந்தது. மாலை 5 மணி அளவில் திடீரென வானத்தில் இருண்ட மேகங்கள் சூழ்ந்தது. 5.30 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதை சுற்றியுள்ள செய்துங்கநல்லூர், நாட்டார்குளம், சேரகுளம், ஆழ்வார்திருநகரி, புதுக்குடி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.
இதற்கிடையில் செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருகை தருவார்கள். 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்து வந்தனர். தீடிரென பெய்த கனமழையால் அனைத்து வியாபாரங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சந்தை வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் வியாபாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மழை பெய்ததால் ஒதுங்க இடம் இன்றி தார்ப்பாய் கீழே நின்றனர்.


