மேரி கியூரி ( நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
மரியா ஸ்க்லடவ்ஸ்கா போலாந்தின் வார்சாவில், 7 நவம்பர் 1867இல் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்பட்டனர்.
1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார்.
1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.


