பிபின் சந்திர பாலர் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் முக்கியமானவர். ஸ்ரீ அரவிந்தர் அவரை “மிகுந்த வல்லமையும் கொள்கைப்பிடிப்பும் உடைய தேசாபிமானி” என்றார். லால்-பால்-பால் என்று அழைக்கப்பட்ட மும்மூர்த்திகளில் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய். இம்மூவர்தான் சுயராச்சியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள். அவர் “புரட்சி எண்ணங்களின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். அவர் ஆசிரியர், பத்திரிக்கையாளர், மேடைப்பேச்சாளர், எழுத்தாளர். அவர் 1858-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் நாள் தற்போது பங்காள தேஷ் நாட்டில் உள்ள சில்ஹட் மாவட்டத்தில் உள்ள போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ராமச்சந்திர பால் ஒரு ஜமீந்தார், பெர்சிய மொழியில் புலமை பெற்றவர். தாயார் நாராயணி தேவி. அவர் வசதியான ஹிந்து வைஷ்ணவக் குடும்பத்தின் ஒரே புதல்வர். அவரது ஒரே சகோதரி கிரிபா.
பிபின் முதலில் தனது தந்தையிடம் கல்வி கற்றார். பின்னர் ஒரு மௌல்வியிடம் பெர்சிய மொழி கற்றார். சில்ஹட்டில் உள்ள மிஷினரி பள்ளிகளிலும், அரசாங்க உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கசேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடிக்கவில்லை. ஆனால் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கீதை, உபநிடதம் போன்றவற்றை ஆழமாகக் கற்றவர். கல்கத்தாவில் படிக்கும் போது கேஷப் சந்திரா சென், பிஜோய் கிருஷ்ண கோஸ்வாமி ஆகியோர் அவருக்கு ஆன்மிகத்தில் வழிகாட்டியாக இருந்தனர். ஷிவ் நாத் சாஸ்திரி, சுரேந்திர நாத் பானர்ஜி ஆகியோர் அவருக்கு அரசியலில் வழிகாட்டியாக இருந்தனர். 1879-ல் கட்டாக்கில் உள்ள கட்டாக் அகாடெமியின் தலைமை ஆசிரியர் ஆனார். ஸில்ஹட், பங்களூர், ஹபிகஞ்ச் ஆகிய இடங்களிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நூலகராகப் பணியாற்றினார்.


